கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் கைது @ ஸ்வாதி மலிவால் விவகாரம் 

By KU BUREAU

புதுடெல்லி: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இடைக்கால ஜாமீனில் சமீபத்தில் வெளியே வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் சென்றார். கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள முதல்வர் வீட்டுக்குச் சென்ற போது கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் வியாழக்கிழமை ஸ்வாதியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் ஸ்வாதி எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார்.

அதில், “கடந்த 13-ம் தேதி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது கன்னத்தில் பலமுறை ஓங்கி அறைந்தார். என்னை தரையில் இழுத்து தள்ளினார். இதில் எனது ஆடைகள் அலங்கோலமாகின. எனது மார்பிலும், வயிற்றிலும் அவர் எட்டி உதைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்பேரில், கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி, தற்போது பிபவ் குமாரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE