"உன் மகனுக்கு ஜாமீன் வேண்டும் என்றால் எனக்கு மசாஜ் செய்து விடு" என்று காவல் துறை அதிகாரி ஒருவர் பெண்ணை பணிய வைத்ததோடு, அவரும் அந்த அதிகாரிக்கு மசாஜ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம், சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா காவல் நிலையத்திற்கு ஒரு பெண் தனது மகனுக்கு ஜாமீன் கோரி மனு அளிக்க சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரி சசிபூஷன் சின்ஹா அந்த பெண்ணிடம் தனக்கு மசாஜ் செய்துவிடும்படி கூறி உள்ளார். அந்த பெண்ணும் மசாஜ் செய்து உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் போலீஸ் அதிகாரி சட்டையில்லாமல் அமர்ந்திருக்க பெண் மசாஜ் செய்து விடுகிறார். மேலும் அந்த வீடியோவில் போலீஸ் அதிகாரி மசாஜ் செய்யும் பெண்மணியின் வழக்கு ஒன்று குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.