மனைவிக்கு 4 வருடமாகச் சம்பளம் இல்லை: பெண் அதிகாரியைத் தாக்கியவர் கைது

By காமதேனு

ஒடிசா மாநிலத்தின் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹம்பூரின் பெல்லகுந்தா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகத் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுபவர் சாந்திலதா சாஹு. இவர், கடந்த 4 ஆண்டுகளாகத் தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கோரி, மாவட்டக் கல்வி அதிகாரியின் அலுவலகம் முன்பு கடந்த 4 மாதங்களாகப் போராட்டம் நடத்திவந்தார்.

இந்நிலையில், நேற்று (ஏப்.26) மதிய உணவு சாப்பிடுவதற்காகக் கிளம்பிய மாவட்டக் கல்வி அதிகாரியை இடைமறித்த சாந்திலதா சாஹு, தனக்கு ஏன் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கேட்டார். அப்போது சாந்திலதாவின் கணவரும் அருகில் இருந்தார். அப்போது இரு தரப்புக்கும் இடையில் வாய்த் தகராறு முற்றிய நிலையில், அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் சாந்திலதாவின் கணவர். இதையடுத்து, அதிகாரி அளித்த புகாரின் பேரில் தம்பதியினர் இருவரும் கைதுசெய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர்.

அப்போது தனக்கு 4 ஆண்டுகளாகச் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி சாந்திலதா கதறி அழுதார். அதேசமயம், அதிகாரிகள் தன்னை சஸ்பெண்ட் செய்யவில்லை என்றும் தனக்குச் சம்பளம் வழங்கப்படாததற்குக் காரணம் சொல்லவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அவரைப் பணியில் சேருமாறும் அழைத்த பின்னரும் அவர் அதைச் செய்யாமல் போராடிக்கொண்டிருந்ததாக மாவட்டக் கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE