> மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு: மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையைப் பெற்றார் ஓம் பிர்லா.
முன்னதாக, மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஓம் பிர்லாவின் பெயரை அவையில் முன்மொழிந்தார் பிரதமர் மோடி. பிரதமரால் முன்மொழியப்பட்ட ஓம் பிர்லாவின் பெயரை பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். 48 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டதில், ஓம் பிர்லா தேர்வாகினார். அவரை இருக்கைக்கு அழைத்துச் செல்லும்போது பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் கைகுலுக்கினர்.
> சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி, “இந்த அவை இந்திய மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. அந்தக் குரலின் இறுதி நடுவர் நீங்கள். உங்களின் பணியை எளிமையாக்க எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும். அதற்கேற்ப இந்த அவை சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் ஒத்துழைப்பது மிகவும் முக்கியம். அதேபோல, இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரலும், பிரதிநிதித்துவமும் மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்தார்.
> ‘1975 அவசரநிலை’க்கு எதிராக மக்களவையில் தீர்மானம்: மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்ற ஓம் பிர்லா, சிறிது நேரத்திலேயே 1975-ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்றை வாசித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதன் தொடர்ச்சியாக, அவை உறுப்பினர்களை சிறிது நேரம் மவுனமாக இருக்குமாறு வலியுறுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா, பின் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
» ஜூலையில் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் - லட்சக்கணக்கான போலீஸாருக்கு விழிப்புணர்வு
» “வெளியேற்றம் நடக்காது என நம்புகிறோம்...” - மக்களவை சபாநாயகரிடம் ராகுல், அகிலேஷ் எதிர்பார்ப்பு
முன்னதாக, காங்கிரஸ் உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி சபாநாயகர் ஓம் பிர்லா தனது தீர்மானத்தை வாசித்தார். அப்போது அவர், “1975ல் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட முடிவை இந்த அவை கடுமையாகக் கண்டிக்கிறது. எமர்ஜென்சியை எதிர்த்து போராடி, இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றிய அனைவரின் உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியாவில் சர்வாதிகாரத்தை திணித்தார் இந்திரா காந்தி. அதன் காரணமாக, இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் நசுக்கப்பட்டன; கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்பட்டது” என்று பேசினார்.
> ஓம் பிர்லா தீர்மானத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்: "சபாநாயகர், அவசரநிலையை வன்மையாகக் கண்டித்ததற்கும், அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை எடுத்துரைத்ததற்கும், ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த விதத்தை குறிப்பிட்டதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தியது ஓர் அற்புதமான செயல்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “இன்று பாஜக என்ன செய்தாலும் அவை வெறும் பாசாங்குதான். எமர்ஜென்சி நேரத்தில் சிறை சென்றவர்கள் அவர்கள் மட்டும் அல்ல. எத்தனை காலம்தான் கடந்த காலத்தையே திரும்பிப் பார்ப்பது?” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “தேவையற்ற பிரிவினைவாத அரசியலை பாஜக செய்து வருகிறது. இது நாட்டுக்கு நல்ல செய்தியை சொல்லவில்லை.”என்றார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “1975 ஜூன் 26 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனியாக முடிவெடுத்து எமர்ஜென்சியை கொண்டு வந்தார். அதனால்தான் இன்று அதற்கு எதிராக நாங்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அரசியல் சட்டம் நசுக்கப்படுவதை நாங்கள் மீண்டும் அனுமதிக்க மாட்டோம்.” என்றார்.
பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், “அரசியலமைப்புக்காக அதிகம் பேசுபவர்கள்தான் எமர்ஜென்சிக்கு பொறுப்பேற்க வேண்டும். அப்பா, பாட்டி பெயரை கூறி வாக்கு சேகரிக்கிறார்கள். அதேபோல் அவர்கள் செய்த செயலுக்கு பொறுப்பேற்பார்களா?” என்றார்.
> கேஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அப்போது, அவரை கைது செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இதையடுத்து, கேஜ்ரிவாலை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் அஜர்படுத்தினர்.
இதனைடையே, விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதேவேளையில், “கேஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வராமல் இருக்க முழு அமைப்பும் முயல்கிறது. இது சட்டம் அல்ல. இது சர்வாதிகாரம். இது அவசரநிலை” என்று அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
> “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே திமுகவின் எண்ணம்”: சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். தனித் தீர்மானம் கொண்டுவந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “சமீப காலமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதே பேரவையில் பாமக உறுப்பினர் ஜிகே மணி, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் என பேசினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான் திமுகவின் எண்ணமும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே எழுதிய கடிதத்துக்கு தற்போதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
> அதிமுகவினர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்: சட்டப்பேரவை புதன்கிழமை தொடங்கியதுமே அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
> செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க அவகாசம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை விசாரித்து முடிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
> மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாஞ்சோலை, காக்காச்சி, குதிரை வெட்டி, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்துவது தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல என்று அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
> கள்ளக்குறிச்சி போலீஸிடம் குஷ்பு ஆவேசம்: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் 3 பேர் கொண்ட விசாரணை குழு நேரில் சென்று புதன்கிழமை விசாரணை நடத்தினர். மேலும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது, “கள்ளச் சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அதிகாரிகள்தான் குற்றவாளிகள். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். டெல்லி சென்று மகளிர் ஆணையத்தில் அறிக்கை அளிக்கவுள்ளோம்” என்று குஷ்பு தெரிவித்தார்.
அதேபோல், இக்குழு கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்குச் சென்றது. அங்கிருந்த போலீஸாரிடம் சராமரியாக கேள்வி எழுப்பினர். போலீஸாரிடம் குஷ்பு பேசுகையில், “கூலித் தொழில் செய்யும் 130 பேருக்கு கள்ளச் சாராயம் எளிதாக கிடைக்கிறது என்றால், போலீஸுக்கு தெரியாமல் எப்படி நடந்திருக்கும்? என்ன சார் உங்களுக்கு தெரியவே தெரியாதுனு சொல்றீங்க, இதில் என்ன லாஜிக் இருக்கிறது,” என தொடர்ந்து ஆவேசமாக கேள்வி கேட்டார்.
அதற்கு போலீஸார் , “கள்ளச் சாராய வழக்கில் அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம்,” என்றனர். அதற்கு குஷ்பு, “கைது செய்தால் அவர்களுக்கு யாராவது உதவி செய்து ஜாமீனில் வெளியே வந்துவிடுகிறார்கள். ஒருவர் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்கிறார்கள். அவர்கள் திருந்தும் அளவுக்கு தண்டனையே கிடைப்பதில்லை,” என குற்றம்சாட்டினார்.
இதனிடையே, கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி - ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த இருவரும், சேலத்தில் இருவரும் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் சிகிச்சையில் இருந்தவர்களில் 46 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆனார்கள்.