‘தண்ணீர் தரவில்லையா? தம்பதியினர் காவல் நிலையத்தில் தேநீர் அருந்துவதைப் பாரீர்!’

By காமதேனு

மும்பை சிறையில் தானும் தன் கணவரும் மோசமாக நடத்தப்படுவதாகவும், குடிநீர் கூட வழங்கப்படவில்லை என்றும் நவ்னீத் ராணா எம்.பி, மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில், தம்பதியினர் இருவரும் காவல் நிலையத்தில் தேநீர் அருந்தும் காணொலியை மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே வெளியிட்டிருக்கிறார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டுக்கு முன்னர் அனுமன் சாலிஸா பாடப்போவதாக அறிவித்த நிலையில் சுயேச்சை எம்.பி நவ்னீத் ராணாவும் அவரது கணவர் ரவி ராணாவும் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, மும்பையின் கார் (Khar) காவல் நிலையச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களை மிருகங்களைவிட கேவலமாக போலீஸார் நடத்துவதாக நவ்னீத் ராணா புகார் தெரிவித்திருந்தார். பட்டியலினத்தைச் சேர்ந்த தன்னை சாதி ரீதியாக போலீஸார் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பான புகார்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

‘குடிநீர் வேண்டும் என இரவு முழுவதும் மீண்டும் மீண்டும் கோரினேன். ஆனால், குடிநீர் வழங்கப்படவில்லை. அதைவிட அதிர்ச்சியான விஷயம், நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதே தம்ளரில் எனக்குக் குடிநீர் கொடுக்க முடியாது என அங்கிருந்த காவலர் சொன்னதுதான். விலங்குகளைவிட கேவலமாக நாங்கள் நடத்தப்பட்டோம்’ என அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். காவல் ஆணையர், மும்பை காவல் துறை, டிசிபி, உதவி ஆணையர், காவலர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து, இதுகுறித்த உண்மை நிலவரத்தைப் பதிவுசெய்யுமாறு மகாராஷ்டிர அரசுக்கு மக்களவையின் சிறப்புரிமை மற்றும் நெறிமுறைகள் பிரிவு உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில், ரவி ராணாவும், நவ்னீத் ராணாவும் காவல் நிலையத்தில் அமர்ந்து தேநீர் அருந்தும் காட்சி அடங்கிய காணொலியை சஞ்சய் பாண்டே வெளியிட்டிருக்கிறார்.

அத்துடன், ‘இதற்கு மேலும் நாங்கள் எதையேனும் சொல்ல வேண்டுமா?’ என்று அதில் கேப்ஷனும் எழுதியிருக்கிறார் சஞ்சய் பாண்டே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE