நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார பேட்டரி வாகனங்கள் தீப்பற்றி வெடித்துச் சிதறும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டன. இந்நிலையில், 1,441 மின்சார ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெற முடிவெடுத்திருக்கிறது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்.
மார்ச் 26-ல், மகாராஷ்டிர மாநிலம் புணே நகரின் தானோரி பகுதியில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓலா மின்சார ஸ்கூட்டர் தானாகத் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்தது. இது குறித்த விசாரணை தொடர்ந்து நடந்துவந்த நிலையில், தற்போது இந்த முடிவை அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது ஒரு தனிப்பட்ட விபத்து என அந்நிறுவனத்தின் ஆரம்பகட்ட ஆய்வு தெரிவித்தது. எனினும், குறிப்பிட்ட வரிசை ஸ்கூட்டர்களில் தொடர்ந்து ஆய்வுசெய்ய வேண்டியிருப்பதால், தானாக முன்வந்து அவற்றைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.
ஓலா நிறுவனத்தின் தயாரிப்புகள் மட்டுமல்லாமல் பிற நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களும் விபத்தில் சிக்கிவருவது அந்நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் 3,000 ஸ்கூட்டர்களையும், ப்யூர்-ஈவி நிறுவனம் 2,000 ஸ்கூட்டர்களையும் திரும்பப் பெற்றிருக்கின்றன.
இதற்கிடையே, மின்சார ஸ்கூட்டர்கள் தீவிபத்தில் சிக்குவது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இவ்விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொள்ளும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.