லதா மங்கேஷ்கர் பெயரில் அங்கீகாரம்: முதலாவதாக விருது பெறும் மோடி!

By காமதேனு

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் இன்று (ஏப்.24) முதன்முறையாகக் காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி. ஜம்மு அருகில் உள்ள சாம்பா மாவட்டத்தின் ‘பள்ளி’ பஞ்சாயத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதன் பின்னர் இன்று மாலை அவர் மும்பை செல்கிறார்.

இதுதொடர்பாக நேற்று ட்வீட் செய்த அவர், ‘லதா தீனாநாத் மங்கேஷ்கர் பெயரில் வழங்கப்படும் முதல் விருதைப் பெற்றுக்கொள்ள நாளை மாலை நான் மும்பை செல்வேன். சகோதரி லதாவின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது எனக்கு அளிக்கப்படுவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வலிமையான வளமான தேசமாக இந்தியா உருவாக வேண்டும் என்று எப்போதுமே அவர் கனவு கண்டார். தேசக் கட்டுமானத்திலும் பங்களித்தார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், தனது 92-வது வயதில் மும்பையில் காலமானார்.அவரை கவுரவப்படுத்தும் வகையில், அவரது பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடி

‘நமது தேசத்துக்கும் மக்களுக்கும் சமூகத்துக்கும் சிறப்பான, முன்மாதிரியான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு விருது வழங்கப்படும்’ என மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் ஸ்மிருது பிரதிஷ்தான் அறக்கட்டளை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, மீனா மங்கேஷ்கர், உஷா மங்கேஷ்கர், ஹ்ருதயநாத் மங்கேஷ்கர் என இசைத் துறையில் முத்திரை பதித்த ஆளுமைகளின் தந்தை தீனாநாத். மேடை நாடகங்களிலும், இசையிலும் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE