கட்டணம் ரூ.350, ஒருநாள் முழுவதும் பயணிக்கலாம்: வந்துவிட்டது மொட்டை மாடி பேருந்து

By என்.சுவாமிநாதன்

கேரளத்தின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறையே பெரும்பங்கு வகித்துவருகிறது. ஆனால் கரோனாவால் சுற்றுலாத்துறை கடுமையாக வீழ்ந்திருந்தது. இதனால் கேரளத்தின் பொருளாதாரத்திலும் பெரிய அளவில் தேக்கம் ஏற்பட்டது.

இப்போது கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் அகற்றிக்கொள்ளப்பட்டு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் மீண்டும் சுற்றுலாத்துறையில் கவனம் குவித்துள்ளது கேரள அரசு. அதன் ஒரு அங்கமாக மக்களின் கொண்டாட்டத்திற்கென பிரத்யேகமாக திறந்தநிலை மொட்டைமாடி பேருந்தை இயக்கத் தொடங்கியுள்ளது.

கொண்டாட்டமாக பயணிக்கும் மக்கள்

மொட்டை மாடி திறந்தநிலை பேருந்து என்பதுதான் இதன்பெயர். இதில் திருவனந்தபுரம் வீதிகளில் நகர் உலா வரமுடியும். சர்க்குலர் பேருந்துகள் போல் தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரையிலும், இதேபோல் மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணிவரையிலும் இந்த பேருந்து திருவனந்தபுரம் வீதிகளை சுற்றிவரும். திறந்தநிலை மொட்டை மாடி பேருந்து என்பதால் இது சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவரும் என்பதாலேயே இந்த ஏற்பாடு!

இந்த பேருந்தில் முழுமையான பயணத்திற்கு பயணக்கட்டணம் 250 ரூபாய். நேற்று மாலை இதை அமைச்சர்கள் கொடியசைத்து தொடக்கி வைத்த நிலையில், இன்றுமுதல் தினசரி சேவையை முழுநேரமாகத் தொடங்கியிருக்கிறது மொட்டைமாடி பேருந்து. இந்தப் பயணத்திற்கு அறிமுகச் சலுகையாக 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகே உள்ள கிழக்கே கோட்டையில் இருந்து புறப்படும் இந்தப் பேருந்து அங்கிருந்து தலைமை செயலகம், சட்டப்பேரவை, கனகக்குன்று அரண்மனை, அருங்காட்சியகம், வெள்ளையம்பலம், கோவளம், லூலுமால்வேர் ஆகிய இடங்களுக்குச் சென்றுவரும். இந்த பயணத்தில் சுற்றுலாப் பயணிகள் இந்த இடங்களையெல்லாம் இறங்கிச் சென்று பார்த்து ரசிக்கவும் நேரம் ஒதுக்கப்படும். காலையும், மாலையும் இதேபோல் சென்றுவர 350 ரூபாய் செலுத்தினால் போதும்.

அதேபோல் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடங்கி, அனைத்துவகையான நிகழ்ச்சிகளுக்கும் இந்த பேருந்தை பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பயன்படுத்த நினைப்பவர்கள் மொத்தம் 50 டிக்கெட்கள் எடுக்க வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் ஆகியோரின் முழுமுயற்சியால் இன்றுமுதல் முழுநேரமாக ஓடத் தொடங்கியுள்ளது இந்த திறந்தநிலை மொட்டைமாடி பேருந்து! இது கேரளத்திற்குவரும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிய வரவேற்பைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE