தமிழக எம்.பி.க்களின் ‘முழக்கங்கள்’ முதல் வரலாறு படைத்த ஆப்கன் அணி வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

> தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு: நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலரும் தமிழில் உறுதிமொழி கூறி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்புக்குப் பின் ‘ஜெய் பீம்’, ‘ஸ்டாலின் வாழ்க’, ‘உதயநிதி வாழ்க’, ‘தமிழ் வெல்க’, ‘அரசியலமைப்பு வாழ்க’ முதலான முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், பதவியேற்பு உறுதிமொழியோடு “சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் மீதான வெட்ககரமான தாக்குதலை நிறுத்துங்கள். ஜெய் பீம்! வாழ்க அரசியலமைப்பு!” என்று முழங்கினார்.

மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பதவி ஏற்றபின் பின் "வேண்டாம் நீட், Ban நீட்" என முழக்கமிட்டார். முன்னதாக, ‘பெரியார் வாழ்க, தமிழ்நாடு வாழ்க, அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வாழ்க’ என்றும் தயாநிதி மாறன் முழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதவியேற்ற பின் ‘ஜனநாயகம் வாழ்க. அரசியலமைப்பு வாழ்க’ என்றார். இதேபோல் கனிமொழி எம்.பி. பதவி ஏற்ற பிறகு ‘அரசியலமைப்பு வாழ்க’ முழக்கமிட்டார்.

கிருஷ்ணகிரி தொகுதி எம்பி கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றார். பின்னர் அவர் ‘ஜெய் தமிழ்நாடு’ என முழங்கினார். டிஆர்.பாலு, ஆ.ராசா ஆகிய இருவரும் பதவியேற்ற பின்னர் எந்த முழக்கங்களையும் எழுப்பவில்லை.

> ‘2026 ஜனவரிக்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்’: “வரும் ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக 17, 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 ஆசிரியப் பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும் நிரப்பப்படும். அதாவது வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தவிர, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30,219 பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்துப் பார்க்கையில், 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்பதை தங்கள் வாயிலாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

> அறிக்கை கோரிய தேசிய மனித உரிமை ஆணையம்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர், காவல்துறை டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கள்ளச் சாராயத்தை உற்பத்தி செய்தல், வாங்கி, விற்றல் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநிலத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்துக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் விவரங்கள், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட இழப்பீடு உள்ளிட்டவை அரசின் அறிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும். இச்சம்பவத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான அறிக்கை தயாராக உள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

> கள்ளக்குறிச்சி சம்பவம்: ஆளுநரிடம் இபிஎஸ் மனு: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் தொடர்பாக நேர்மையான, நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் எம்.பி.,க்கள் உடன் இருந்தனர்.

இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுகவுக்கு செவ்வாய்க்கிழமை ஒரு நாள் தடையும் விதித்தார்.

> செந்தில் பாலாஜி காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 1-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

> மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா, கே.சுரேஷ் போட்டி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதல்முறையாக போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே.சுரேஷும் போட்டியிடுகின்றனர். மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் புதன்கிழமை நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, “எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம்.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அதேபோல், சபாநாயகரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க தற்போதும் நாங்கள் தயார்; ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு விட்டுத்தர வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

> பதவியேற்ற ராகுல் காந்தியின் முழக்கம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராக பதவியேற்றார். அரசியல் சாசன பிரதியை கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் ‘இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க!’ என முழக்கமிட்டார்.

> T20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா, ஆப்கன்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் 24 ரன்களில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

‘சூப்பர் 8’ குரூப்-1 பிரிவின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் விளையாடின. இந்த ஆட்டத்தில் ஆப்கன் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம். குறிப்பிட்ட ஓவர்களுக்குள் வங்கதேசம் இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. அது இரண்டும் நடக்காத பட்சத்தில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் சூழல் இருந்தது.

20 ஓவர்களில் ஆப்கன் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மந்தமாக இருந்தது. 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கீடு காரணமாக அவ்வப்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறையில் 19 ஓவர்களாக ஆட்டம் மாற்றப்பட்டது. பல திருப்பங்களுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான்
8 ரன்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. ஆஸ்திரேலிய அணி வெளியேற்றப்பட்டது.

“இந்த சாதனையை எண்ணி எங்கள் நாட்டு மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த தொடரில் எங்கள் அணியின் செயல்பாடு அற்புதமாக இருந்தது. இது எங்களுக்கு பெரிய சாதனை தான்” ஆப்கன் அணி கேப்டன் ரஷித் கான் பெருமிதம் பொங்க கூறினார்.

> கேஜ்ரிவாலின் ஜாமீனுக்கு தடை விதித்து ஐகோர்ட் தீர்ப்பு: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை தடை செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு புதன்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.

> பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு ஈடாக ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்ச் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE