ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த எஸ்-400 ஏவுகணை சாதன இன்ஜின்கள்!

By காமதேனு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் நாளுக்கு நாள் உச்சமடைந்துவரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை சாதனத்தின் மாற்றியமைக்கப்பட்ட இன்ஜின்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்திருக்கிறது இந்தியா. விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனமான எஸ்-400 சாதனத்தைப் பிரயோகிப்பதற்கான சிமுலேட்டர் உள்ளிட்ட பயிற்சிக் கருவிகள் இந்தியாவை வந்தடைந்திருக்கின்றன. இதில் ஏவுகணைகள், ஏவுதள சாதனங்கள் போன்றவை இடம்பெறவில்லை எனப் பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.

ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் இந்தியா, உக்ரைன் போர்ச் சூழலிலும் இவ்விஷயத்தில் ரஷ்யாவுடனான உறவைத் தொடர்கிறது. பல தசாப்தங்களாக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள், பீரங்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி cசெய்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்திருந்தாலும், ரஷ்யாவிடமிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளைக் குறைத்துக்கொள்ளவில்லை. தற்போது உக்ரைன் போர் நடந்துவரும் நிலையில்தள்ளுபடி விலையில் ரஷ்யா வழங்கும் எரிபொருளையும் இறக்குமதி செய்கிறது.

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் தடையின்றி இந்தியாவுக்கு வருகின்றன என்றாலும், அதற்கான தொகையை ரஷ்யாவுக்குச் செலுத்துவதில் இந்தியாவுக்குச் சிக்கல்கள் இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், ஐநா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகிய அமைப்புகள் தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. ரஷ்ய ஆட்சியாளர்கள், நிறுவனங்கள், தொழிலதிபர்கள் போன்றோருடன் ரஷ்ய வங்கிகள் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், ரஷ்ய வங்கிகளுடனான பரிவர்த்தனைகளைத் தொடர்வதில் இந்தியாவுக்குச் சிக்கல்கள் உண்டு. அதேசமயம், இந்தச் சிக்கல்களைக் களைவதற்கு இரு தரப்பும் முயற்சிகள் எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE