பெங்களூரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நடந்தது என்ன?

By காமதேனு

பெங்களூருவில் உள்ள 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

இன்று காலை 11 மணி அளவில் பெங்களூருவில் உள்ள கோபாலன் இன்டர்நேஷனல், நியூ அகாடமி, சர் வின்சென்ட் பால் உள்ளிட்ட 7 பள்ளிகளுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.

அதில், ‘உங்கள் பள்ளியில், சக்திவாய்ந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டிருக்கிறது. கவனிக்கவும். இது நகைச்சுவை அல்ல, மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டிருக்கிறது. உடனடியாகப் போலீஸாரையும் மீட்புக்குழுவினரையும் அழையுங்கள். நீங்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். தாமதிக்காதீர்கள். எல்லாமே உங்கள் கையில்தான் இருக்கிறது’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதுபோல் 50-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டதாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக அந்தப் பள்ளிகளுக்குச் சென்று சோதனை நடத்தினர். பள்ளிகளில் தேர்வுகள் நடந்துவந்த நிலையில், மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில் அந்தப் பள்ளிகளில் வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இது புரளி எனப் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE