‘மோடி அரசைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றி என்பது கொள்ளையடிப்பதற்கான லைசென்ஸ்!’

By காமதேனு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத் தலைநகரான போபாலில் இன்று (ஏப்.7) நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக், பாஜக தலைமையிலான மோடி அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

போராட்டக் களத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகினி, “2014-ல் பாஜக ஆட்சி அமைவதற்கு முன்பு, பெட்ரோல் விலை ரூ.71.41 ஆகவும், டீசல் விலை ரூ.55.49 ஆகவும் இருந்தது. ஆனால், இன்றைக்கு இரண்டின் விலையும் 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. 2014 முதல் பெட்ரோல் மீதான கலால் வரி, ஒரு லிட்டருக்கு ரூ.9.20 என்பதிலிருந்து ரூ.18.70 ஆக அதிகரித்திருக்கிறது. டீசல் மீதான கலால் வரி ரூ.3.46 என்பதிலிருந்து ரூ.18.34 ஆக உயர்ந்திருக்கிறது” என்று கூறினார்.

“கடந்த 17 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 14 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், எரிபொருள் விலையில் 10 ரூபாய் அதிகரித்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துவருவதால் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விலை உயர்வு மக்களின் முதுகெலும்பை நொறுக்கியிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலில் கிடைக்கும் வெற்றியை, கொள்ளையடிப்பதற்கான லைசென்ஸாக மோடி அரசு கருதுகிறது” என்று ராகினி கூறினார்.

“ஏப்ரல் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை 10 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, பயணம் மேற்கொள்வதே செலவுபிடிக்கும் விஷயமாகப்போகிறது. பொருட்களின் விலையும் அதிகரிக்கப்போகிறது. இரும்பு, சிமென்ட், செங்கல், மரப் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரித்திருக்கிறது. இதனால், வீடு கட்டுவதற்கான செலவு 15 சதவீதம் அதிகரித்திருக்கிறது” என்று கூறிய ராகினி, “உரங்களின் விலையை உயர்த்தியிருப்பதன் மூலம், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளையும் மோடி பழிவாங்கிவிட்டார்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE