இந்தியாவில் எக்ஸ்.இ தொற்று: என்ன சொல்கிறது மத்திய சுகாதாரத் துறை?

By காமதேனு

மிக வேகமாகப் பரவக்கூடிய எக்ஸ்.இ திர்பு கரோனா வைரஸ் தொற்று மும்பையில் ஒருவருக்குக் கண்டறியப்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. தொற்றுக்குள்ளானவருக்குத் தீவிரமான அறிகுறிகள் இல்லை என்றும் பிருஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை இதை மறுத்திருக்கிறது.

பிரிட்டனில் ஜனவரி 19-ல் முதன்முதலாக எக்ஸ்.இ திரிபு கண்டறியப்பட்டது. அந்நாட்டில் இதுவரை 637 பேருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திரிபானது, பிஏ1 மற்றும் பிஏ2 ஒமைக்ரான் வைரஸின் இணைப்புத் திரிபு ஆகும். ஒருவர் பல்வேறு திரிபு கரோனா வைரஸ்களின் தொற்றுக்குள்ளாகும்போது இப்படியான இணைப்புத் திரிபு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கரோனாவின் எந்தத் திரிபை விடவும் எக்ஸ்.இ வகை திரிபு, மிக வேகமாகப் பரவக்கூடியது என உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரம் கூறியிருந்தது.

இந்தச் சூழலில், இந்தியாவில் முதன்முறையாக இந்தத் திரிபின் தொற்று கண்டறியப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகி சில மணி நேரங்களில் மத்திய சுகாதாரத் துறை அதை மறுத்திருக்கிறது. மத்திய சுகாதாரத் துறையின் ஆய்வு அமைப்பான இன்ஸாகாக் (The Indian SARS-CoV-2 Genomics Consortium), இது குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மும்பையில் தொற்று கண்டறியப்பட்டவரின் மாதிரியை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கரோனா வைரஸின் பல்வேறு திரிபுகள் அவருக்குத் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் இன்ஸாகாக் கூறியிருக்கிறது. பல்வேறு திரிபுகளின் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை மரபணு தொடர்வரிசையை மீண்டும் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது என்று அந்த அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE