தெலங்கானா பக்கம் கவனம் செலுத்தும் ராகுல் காந்தி!

By காமதேனு

2024 மக்களவைத் தேர்தலில், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார், தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) தலைவருமான கே.சந்திரசேகர் ராவ். அந்த அணியில் காங்கிரஸும் இடமில்லை என்பது கவனிக்கத்தக்கது. இப்படி இரு பெரும் தேசியக் கட்சிகளுக்கு மாறாக மாநிலக் கட்சிகளை ஒன்றிணைப்பதில் சந்திரசேகர் ராவ் முனைப்பு காட்டும் நிலையில், தெலங்கானா மாநில காங்கிரஸைப் பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் ராகுல் காந்தி.

அடுத்த ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் நிலவும் முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து சந்திரசேகர் ராவ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பணிகளில் காங்கிரஸ் கட்சியினரை ராகுல் காந்தி முடுக்கிவிட்டிருக்கிறார்.

அந்த வகையில், இன்று மாலை டெல்லியில் அவரது இல்லத்தில் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். கடந்த 7 நாட்களில் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களுடன அவர் நடத்தும் இரண்டாவது கூட்டம் இது.

பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்கும் முயற்சியில் சமீபத்தில் மும்பை சென்றிருந்த சந்திரசேகர் ராவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்...

தெலங்கானாவில் நெல் கொள்முதல் தொடர்பான பிரச்சினை தீவிரமடைந்திருக்கிறது. அம்மாநிலத்தில் விளையும் நெல்லைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு மறுப்பதாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு குற்றம்சாட்டிவருகிறது. ஆனால், இவ்விஷயத்தில் மத்திய அரசுடன் ஒத்துழைக்க சந்திரசேகர் ராவ் அரசு மறுப்பதுதான் பிரச்சினைக்குக் காரணம் என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியிருக்கிறார். இந்தச் சூழலில், நெல் கொள்முதல் பிரச்சினை குறித்து தெலங்கானா காங்கிரஸ் கட்சியினருடன் ராகுல் காந்தி பேசவிருக்கிறார்.

2018 தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும், சந்திரசேகர் ராவின் வெற்றியை அந்தக் கூட்டணியால் தடுக்க முடியவில்லை.

தெலங்கானாவில் காங்கிரஸும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் எலியும் பூனையுமாகப் பகைமை பாராட்டுகின்றன. சந்திரசேகர் ராவ் நம்பகத்தன்மையற்றவர் என்பதால், அவரது கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் ஒருபோதும் முன்வராது என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE