நீட் தேர்வு விவகாரம்: மோடியை சாடிய பிரியங்கா காந்தியும், பாஜக எதிர்வினையும் 

By KU BUREAU

புதுடெல்லி: பாஜகவின் ஊழலுக்கு எதிராக போராடும் படியாக இளைஞர்களின் சக்தியும் நேரமும் வீணடிக்கப்படுவதை நிர்கதியாக நிற்கும் பிரதமர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று பிரதமர் மோடியை பிரியங்கா காந்தி சாடியுள்ளார். நீட் - பி.ஜி. 2024 மருத்துவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

பிரியங்காவின் கூற்றுக்கு பதிலடிகொடுத்துள்ள பாஜக, "மாணவர்களின் எதிர்காலத்துடன் எதிர்க்கட்சிகள் விளையாடுவதை தடுப்பதற்காகவே தேர்வுகள் ஒத்திவைப்பு மற்றும் ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது. நீட் - பி.ஜி., மற்றும் சிஎஸ்ஐஆர் - நெட் தேர்வுகள் சில நாட்களுக்குள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வார்த்தைப் போர் அரங்கேறியுள்ளது. யுஜிசி - நெட் தேர்வுத் தாள்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து மத்திய அரசு கடந்த வாரம் அந்தத் தேர்வினை ரத்து செய்தது.

இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பக்கத்தில், "பாஜக ஆட்சியின் கீழ் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பேராசை பிடித்தவர்களின் கைகளில் ஒப்படைக்கும் ஆணவம், அரசியல் பிடிவாதம் மற்றும் முட்டாள்தனமான திறமையற்றவர்கள் தேர்வுதாள் கசிவு, தேர்வுகளை ரத்து செய்தல், கல்வி நிலையங்களில் இருந்து படிப்பை காணமல் போகச் செய்வது, அரசியல் போக்கிரித்தனம் போன்றவைகளை நமது கல்வி முறையின் அடையாளமாக மாற்றியுள்ளன.

பாஜக அரசால் எந்தத் தேர்வினையும் நேர்மையான முறையில் நடத்த முடியவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்துக்கு பாஜக அரசு இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நாட்டின் திறமையான இளைஞர்களின் பொன்னான நேரமும், சக்தியும் பாஜகவின் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் வீணடிக்கப்படுகிறது. நிர்கதியான பிரதமர் மோடி இந்தக் காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்" இவ்வாறு பிரியங்கா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடியின் அரசு திறமையற்றதாக மாறியுள்ளது. தேர்வுத் தாள் கசிவு மோசடி மற்றும் கல்வி மாஃபியாக்களின் முன்பு பிரதமர் நரேந்திர மோடி நிர்கதியாக நிற்கிறார்" என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், "பாஜக ஆட்சியில் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அரசுக்கு எதிராக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொருமுறையும் அமைதியாக இருக்கும் பிரதமர் மோடி, தேர்வுத் தாள் கசிவு மற்றும் கல்வித்துறை மாஃபியாக்களின் முன்பு நிர்கதியாக நிற்கிறார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. நரேந்திர மோடியின் திறமையற்ற அரசு மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதிலிருந்து நாட்டின் எதிர்காலத்தை நாம் காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவின் அமித் மாளவியா பதிலடி கொடுத்துள்ளார். நீட் - யுஜி தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸின் கூட்டணிக்கட்சியான பிஹாரின் ஆர்ஜேடிக்கு தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாளவியா, " நீட் - யுஜி தேர்வுத்தாள் கசிவு காங்கிரஸின் கூட்டணிக்கட்சியான பிஹாரின் ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் தொடர்புடையது. இதனை மறைப்பற்தற்காக நீங்களே ஒரு போலியான வீடியோக்களை பதிவிட்டீர்கள். மீதமுள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் எதிர்க்கட்சிகள் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடவும், இதனைத் தனது கேவலமான அரசியலுக்கும் பயன்படுத்த முடியாது" என்று எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிஹாரில் நீட் தேர்வு தாள் கசிவு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) தேசிய செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நீட், நெட் உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர். கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE