மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ராணா அய்யூப்: பின்னணி என்ன?

By காமதேனு

லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக, நேற்று மும்பை விமான நிலையம் சென்றிருந்த பத்திரிகையாளர் ராணா அய்யூப், குடியேற்றத் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை ஏற்று அவர் ஆஜராகாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் ராணா அய்யூப், பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது தொடர்பாக லண்டனில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விமானம் ஏறத் தயாரானபோது தான் தடுத்துநிறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். லண்டன் கூட்டத்துக்குப் பின்னர் இத்தாலியில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்ததாகக் கூறியிருக்கும் அவர், தனது பயணத் திட்டங்களை சமூக வலைதளப் பக்கங்களில் ஏற்கெனவே பதிவுசெய்திருப்பதாகவும், விமான நிலையத்தில் தான் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னரே அமலாக்கத் துறையின் சம்மன் தனது மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேர்ந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அறக்கட்டளை எனும் பெயரில், பொதுமக்களிடமிருந்து சட்டவிரோதமாக நிதி திரட்டியதாக ராணா அய்யூப் மீது புகார்கள் எழுந்தன. 2020 ஏப்ரல் - மே மாதங்களில் குடிசைப்பகுதி மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் திரட்டப்பட்ட நிதி, 2020 ஜூன் - செப்டம்பரில் அசாம், பிஹார் மற்றும் மகாராஷ்டிர மக்களின் நிவாரணத்துக்காகத் திரட்டப்பட்ட நிதி, 2021 மே - ஜூன் மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திரட்டப்பட்ட நிதி ஆகியவற்றில் அவர் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் காஸியாபாதில் உள்ள இந்திரபுரம் காவல் நிலையம் பதிவுசெய்த புகாரின் அடிப்படையில், ராணா அய்யூபின் பெயரிலான 1.77 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த மாதம் முடக்கியது.

இவ்வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 1-ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE