370-வது சட்டக்கூறு ரத்து: காஷ்மீரில் சொத்து வாங்கிய 34 வெளியாட்கள்!

By காமதேனு

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டக்கூறு 2019 ஆகஸ்ட் 5-ல் மத்திய அரசால் ரத்துசெய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு ஒன்றியப் பிரதேசங்களாகக் காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தின் காரணமாக, வெளிநபர்கள் அங்கு சொத்து வாங்குவது முன்பு தடை செய்யப்பட்டிருந்தது. 370-வது சட்டக்கூறு ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் வெளிநபர்கள் சொத்துகளை வாங்க முடியும் எனும் சூழல் உருவானது.

இந்நிலையில், 370-வது சட்டக்கூறு ரத்துசெய்யப்பட்ட பின்னர் காஷ்மீரில் இதுவரை சொத்து வாங்கிய நபர்களின் விவரம் குறித்து இன்று (மார்ச் 29) மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, மத்திய உள் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “ஜம்மு - காஷ்மீர் அரசு அளித்திருக்கும் தகவலின்படி, ஜம்மு - காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்துக்கு வெளியில் உள்ள 34 பேர், 370-வது சட்டக்கூறு ரத்துசெய்யப்பட்ட பின்னர் அங்கு சொத்து வாங்கியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜம்மு, ரியாசி, உதம்பூர், காந்தர்பல் ஆகிய மாவட்டங்களில் அவர்கள் சொத்துகளை வாங்கியிருப்பதாக நித்யானந்த் ராய் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE