உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்களில் மராத்தி மொழி கட்டாயம்!

By காமதேனு

உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்களில் மராத்தி மொழியைக் கட்டாயமாக்கும் சட்ட மசோதா, மகாராஷ்டிர சட்டப்பேரவையிலும், சட்டமன்ற மேலவையிலும் இன்று (மார்ச் 24) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சட்டமன்ற மேலவையில் உரையாற்றிய மராத்தி மொழி வளர்ச்சித் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், “மகாராஷ்டிர அலுவல் மொழிச் சட்டம் 1964, உள்ளாட்சி நிர்வாகங்களில் மராத்தி மொழியைக் கட்டாயம் எனக் குறிப்பிடவில்லை. எனவே தான், இந்தச் சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது” என்றார்.

முந்தைய சட்டத்தில் இருந்த குறைபாடுகளைச் சாதகமாக்கிக்கொண்டு அதிகாரிகள் இந்தியையும் ஆங்கிலத்தையும் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், அந்தத் தவறைக் களையும் முயற்சிதான் இந்த மசோதா என்றார். அதேவேளையில், வெளிநாட்டுத் தூதர்களைத் தொடர்புகொள்வது உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு ஆங்கிலம் அல்லது இந்தியைப் பயன்படுத்த உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுக்கு அனுமதி உண்டு என்றும் அவர் தெரிவித்தார். அன்றாடம் பயன்படுத்தும் வகையில், மராத்தி வார்த்தைகளுக்கான அகராதியை மகாராஷ்டிர அரசு உருவாக்கிவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியான பாஜக இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், பிருஹன்மும்பை மாநகராட்சித் தேர்தல் நெருங்கிவரும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி கருதுகிறது. முன்னதாக, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய பாஜக எம்எல்ஏ யோகேஷ் சாகர், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் மராத்தி மொழி மீதான நேசம் வெளிப்படுவது ஆச்சரியமளிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து சட்டமன்ற மேலவையில் விளக்கமளித்த அமைச்சர் சுபாஷ் தேசாய், “தேர்தல் நெருங்குகிறது என்பதற்காக நமது கடமையை நாம் உதறிவிட முடியுமா? தேர்தல்கள் வரும், போகும். இந்த மசோதாவைக் கொண்டுவருவது நமது உரிமை” என்றார்.

சட்டமன்ற மேலவை உறுப்பினரான சுபாஷ் தேசாய், மராத்தி மொழி வளர்ச்சித் துறை, தொழில் துறை, சுரங்கத் துறை ஆகிய அமைச்சகங்களைக் கையில் வைத்திருப்பவர் ஆவார். மராத்தி மொழி வளர்ச்சித் துறை, 1960-ல் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE