ஒத்துழைப்பு மேம்பாடு: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடன் பிரதமர் மோடி ஆலோசனை

By வ.வைரப்பெருமாள்

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். மக்களவைத் தேர்தல் முடிவுற்று, இந்தியாவில் புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகு, ஒரு வெளிநாட்டு தலைவர் மேற்கொண்டிருக்கும் முதல் அரசு விஜயம் இதுவாகும். இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி தலைமையில் இருநாட்டு தலைவர்கள் இன்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரு தலைவர்களும் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒருவரையொருவர் 10 முறை சந்தித்து, இரு நாட்டு உறவில் முன்னோடியில்லாத மாற்றங்களைச் செய்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளிடையே வர்த்தகம், போக்குவரத்து, மற்றும் எரிசக்தி உள்ளிட்ட இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்குவதே, இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையின் மையமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் 9ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட தலைவர்களில் ஷேக் ஹசீனாவும் ஒருவர்.

'அண்டை நாடு முதலில்' என்ற கொள்கையின் கீழ் வங்கதேசம், இந்தியாவின் முக்கிய கூட்டாண்மை நாடாக உள்ளது. பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, போக்குவரத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, கடல்சார் விவகாரங்கள் போன்ற துறைகளில் இருநாடுகளிடையே சிறந்த கூட்டுறவு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE