நவீனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானம் செய்கிறோம்!

By காமதேனு

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர் நவீனின் உடல், திங்கள்கிழமை (மார்ச் 21) இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் எனச் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்போவதாக அவரது பெற்றோர் அறிவித்திருக்கின்றனர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த நவீன், கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 4-வது ஆண்டு மருத்துவப் படிப்பு பயின்றுவந்தார். மார்ச் 1-ல் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

எனினும், கார்கிவ், கீவ், மரியுபோல் என உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதால் அவரது உடலை இன்னமும் இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை. கார்கிவ் நகர சவக்கிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது.

அவரது உடல், நாளை இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என முதலில் செய்திகள் வெளியாகின. எனினும், திங்கள்கிழமைதான் நவீனின் உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கமளித்திருக்கிறார். திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு, பெங்களூரு விமான நிலையத்துக்கு அவரது உடல் கொண்டுவரப்படும் என்றும் கர்நாடக முதல்வர் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், மாணவர் நவீனின் தந்தை சேகரப்பா இன்று காலை செய்தியாளர்களிடம் பேசியபோது, “என் மகன் மருத்துவத் துறையில் சாதனை புரிய வேண்டும் என்று விரும்பினான். குறைந்தபட்சம், மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக அவனது உடல் பயன்படும் என்பதால், மருத்துவ ஆராய்ச்சிக்கு அவனது உடலை தானமாக வழங்க எங்கள் குடும்பத்தில் முடிவெடுத்தோம்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE