கர்நாடகாவில் மகாராஷ்டிரா ஏடிஎஸ் அதிகாரிகள் முகாம்: தீவிரவாதிக்கு வலைவீச்சு!

By கவிதா குமார்

பெங்களூரு: புனே மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத செயலில் குற்றம் சாட்டப்பட்டவரை உத்தர கன்னடா மாவட்டம், பட்கலில் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதுடன் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் கபீர் சுல்தான்(எ) மௌலானா சுல்தான் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்து விசாரணைக்கு ஆஜர்படுத்த மகாராஷ்டிரா நீதிமன்ற நோட்டீஸின் அடிப்படையில் ஏடிஎஸ் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், கபீர் சுல்தான் உத்தர கன்னடா மாவட்டத்தில் இருப்பதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தர கன்னடா மாவட்டம், கார்வார் நகரத்தில் பட்கலில் உள்ள நவயாத் காலனியில் அப்துல் கபீர் சுல்தானை கைது செய்ய இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர் அங்கு இல்லாததால், அவரது வீட்டில் நோட்டீஸ் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

அத்துடன், மகராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள், உத்தர கன்னடா காவல் துறையின் ஒத்துழைப்பையும் நாடியுள்ளனர். தீவிரவாதியை ஏடிஎஸ் அதிகாரிகள் தேடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE