மாணவர் நவீனின் உடல் எப்போது இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும்?

By காமதேனு

உக்ரைனின் கார்கிவ் நகரில் கடந்த வாரம் ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் எப்போது இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் எனும் கேள்வி இன்று வரை நீடிக்கிறது.

கார்கிவ் சவக்கிடங்கில்

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் (21), கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 1) அரசுக் கட்டிடம் ஒன்றில் உள்ள ஒரு கடைக்கு வெளியே உணவுப்பொருட்கள் வாங்க வரிசையில் நின்றபோது ரஷ்யப் படைகளின் குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. பாதாள அறை ஒன்றில் பிற மாணவர்களுடன் தங்கியிருந்த அவர், உணவு வாங்க வெளியில் வந்தபோது கொல்லப்பட்டதாக அவரது அறை நண்பர் ஒருவர் கூறியிருந்தார். போர் நடைபெறுவதால் அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவது சவாலான விஷயமானது. தற்போது கார்கிவ் சவக்கிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "நவீனின் சடலம் பதப்படுத்தப்பட்டு உக்ரைனில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். குண்டுவீச்சு நிறுத்தப்பட்டதும் அவரது சடலம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும்” என்று கூறியிருக்கிறார்.

‘நவீனின் உடல் இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும்’ என மத்திய அரசு உறுதியளித்ததாக, கடந்த வாரம் புதன்கிழமை என்டிடிவி சேனலிடம், நவீனின் தந்தை சேகரப்பா கூறியிருந்தார். தனது மகனின் உடலை மீட்டுக்கொண்டுவர பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோரிடமும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE