கரோனா வைரஸின் பிறப்பிடம்: சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததா சீனா?

By காமதேனு

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயின் வூஹான் நகரில் உள்ள கடல் உணவுச் சந்தையிலிருந்துதான் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியது என்றே இன்றுவரை நம்பப்படுகிறது. அந்தச் சந்தையில் மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவு வகைகளுடன், கோழி, பன்றி போன்றவற்றின் இறைச்சியும் விற்கப்பட்டுவந்தது. 2019 டிசம்பர் 31-ம் தேதி மக்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கக் காத்திருந்த சமயத்தில்தான், வூஹான் மருத்துவமனையில் புதிய வகை வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பலர், வூஹான் கடல் உணவுச் சந்தையுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடையவர்களாக இருந்ததும் தெரியவந்தது. அதன் பிறகு, உலகமெங்கும் கரோனா வைரஸ் பரவியதையும், இன்று வரை அதிலிருந்து முழுமையாக விடுபட முடியாமல் உலகம் தவித்துக்கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். டெல்டா, ஒமைக்ரான் எனப் பல திரிபுகள் பரவிய நிலையில், தடுப்பூசிகள் மூலம் ஓரளவுக்கு இந்த பெருந்தொற்றைச் சமாளித்துவருகிறோம்.

கரோனா வைரஸ், வூஹானில் வைரஸ் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படும் ‘வூஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’ எனும் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது எனும் குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து எதிர்கொண்டுவருகிறது. “சீனர்கள் செய்த காரியத்துக்கு, உலகமே விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டது” அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்ததும், சீன வைரஸ் என்று அவர் கோபமாக அதை விளித்ததும் மறக்க முடியாதவை. கரோனாவின் ரிஷி மூலத்தை ஆய்வுசெய்ய சீனாவுக்குச் சென்றிருந்த உலக சுகாதார நிறுவன ஆய்வாளர்களுக்குச் சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் விமர்சனங்கள் உண்டு.

இதற்கிடையே, அரிசோனா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை, கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்திலிருந்து உருவானது அல்ல; வூஹான் கடல் உணவுச் சந்தையிலிருந்துதான் உருவானது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, பஞ்சாப் மற்றும் டெல்லியிலிருந்து வெளியாகும் ‘தி ட்ரிபியூன்’ நாளிதழின் தலையங்கத்தில் (மார்ச் 1), இன்னமும் இவ்விஷயத்தில் சர்வதேச சமூகத்திடம் சீனா குறித்த சந்தேகம் நிலவுகிறது என்றும், பல்வேறு அமைப்புகள் இணைந்து இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; அதற்குச் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

இதற்கு சீனாவே நேரடியாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. ‘இது சீனாவின் தவறு அல்ல’ எனும் தலைப்பில் ‘தி ட்ரிபியூன்’ நாளிதழுக்குக் கடிதம் எழுதியிருக்கும் இந்தியாவுக்கான சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் ஜியாவ்ஜியான், “சீனாவில் ஆய்வு நடத்த ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜப்பான், கென்யா, ரஷ்யா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய உலக சுகாதார நிறுவன நிபுணர் குழுவை இரண்டு முறை அழைத்திருந்தோம். அவர்கள் சீனாவில் தாங்கள் விரும்பிய இடத்துக்கெல்லாம் சென்று, விரும்பிய நபர்களைச் சந்தித்து ஆய்வு நடத்தினர். ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் கசிந்தது எனும் வாதம் ஏற்புடையது அல்ல என்றே உலக சுகாதார நிறுவனம் - சீனாவின் கூட்டறிக்கை தெரிவித்தது” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். அனைவரும் இணைந்தே இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்தியாவில் வெளியாகும் நாளிதழில் இப்படியான ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுவதைக்கூட சீனா உன்னிப்பாகக் கவனிக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக, இந்தியாவுக்கான சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் எழுதியிருக்கும் வாசகர் கடிதம் அமைந்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE