2050-ல் இந்திய பங்குச் சந்தைகள் மதிப்பு 40 லட்சம் கோடி டாலரை தாண்டும்: கவுதம் அதானி கணிப்பு

By KU BUREAU

மும்பை: 2050-ம் ஆண்டுக்குள் இந்திய பங்குச் சந்தைகளின் மொத்த மதிப்பு 40 லட்சம் கோடி டாலரைத் தாண்டிவிடும் என தொழிலதிபர் கவுதம் அதானி கணித்துள்ளார்.

கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவனம்சார்பில் வருடாந்திர உள்கட்டமைப்பு உச்சி மாநாடு மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி பேசியதாவது:

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு 1 லட்சம் கோடி டாலரை (ரூ.83.4 லட்சம் கோடி) எட்டுவதற்கு 58 ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த 12 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி டாலராகவும், அதற்கடுத்த 5 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி டாலராகவும் உயர்ந்தது. நாட்டின் இப்போதைய வளர்ச்சி வேகம் மற்றும் சமூக, பொருளாதார சீர்திருத்தங்களை அரசு செயல்படுத்தும் விதத்தை கருத்தில் கொண்டால், ஜிடிபி மதிப்பு ஒவ்வொரு 12 முதல் 18 மாதங்களில் ஒரு ட்ரில்லியன் டாலர் அதிகரிக்கும்.

இதன்படி பார்த்தால் வரும் 2050-ம் ஆண்டு வாக்கில் நாட்டின் ஜிடிபி 30 ட்ரில்லியன் டாலராக அதிகரிக்கும். அதேநேரம் 2050-ல் இந்திய பங்குச் சந்தைகளின் ஒட்டுமொத்த மதிப்பு 40 லட்சம் கோடி டாலரைத் தாண்டும். அதாவது அடுத்த 26 ஆண்டுகளில், இந்திய பங்குச் சந்தைகளின் மதிப்பு 36 லட்சம் கோடி டாலர் அதிகரிக்கும். இது இப்போது 4 லட்சம் கோடி டாலராக உள்ளது.

வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற வளர்ச்சிக்கு சாத்தியக்கூறு இருப்பதாக தெரியவில்லை. இந்தியனாக இருப்பதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது.

இந்திய உள்கட்டமைப்புத் துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. அதன் பலன் 10 ஆண்டுக்குப் பின் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE