ரஷ்ய நிறுவனங்களுடனான பரிவர்த்தனையை நிறுத்தியதா எஸ்பிஐ வங்கி?

By காமதேனு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் காரணமாக, ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தொடங்கி அந்நாட்டின் தொழிலதிபர்கள், நிறுவனங்கள் வரை பலர் மீதும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை அறிவித்திருக்கின்றன. சர்வதேச அளவிலான இந்தத் தடைகள் மூலம், ரஷ்யத் தொழில் நிறுவனங்களின் வங்கிப் பரிமாற்றங்கள் முடக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் ரஷ்ய நிறுவனங்களுடனான வங்கிப் பரிவர்த்தனைகளை இனி மேற்கொள்ளப்போவதில்லை என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐநா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்கள், வங்கிகள், துறைமுகங்கள், கப்பல்களுடனான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படாது என அந்தக் கடிதத்தில் எஸ்பிஐ வங்கி கூறியிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக, எஸ்பிஐ தரப்பிலிருந்து உடனடியாக எதிர்வினை வரவில்லை என்றாலும், ஊடகங்களுக்குப் பேட்டியளித்த எஸ்பிஐ மூத்த அதிகாரி ஒருவர், சர்வதேச அளவில் எஸ்பிஐ வங்கி கணிசமான செயல்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் அதிகார வரம்புகளில் இருப்பதால் அவற்றின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

பொருளாதாரத் தடைக்குள்ளான நாடுகளுடனான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அந்தக் கடிதத்தில் எஸ்பிஐ கூறியிருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவுடன் பெருமளவிலான வர்த்தகத் தொடர்புகளைக் கொண்ட நாடு ரஷ்யா. இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள், உரத் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவை ரஷ்ய நிறுவனங்களுடன் வணிகத் தொடர்பைக் கொண்டிருக்கின்றன. ஏற்றுமதி, இறக்குமதியும் நடைபெற்றுவருகிறது. ராணுவ ரீதியிலான உறவிலும் ரஷ்யாவுக்கு நெருக்கமான நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியா இறக்குமதி செய்யும் ராணுவத் தளவாடங்களில் ஏறத்தாழ 60 முதல் 70 சதவீதம் வரை ரஷ்யத் தயாரிப்புகள்தான். உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா தவிர்த்துவிட்டது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே, காப்பீடு தொடர்பான சிக்கல்கள் இருப்பதால், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் நிறுவனங்களின் சரக்குகள், கஸாக் சிபிசி ப்ளெண்ட் நிறுவனத்தின் சரக்குகள் ஆகியவற்றை ஏற்கப்போவதில்லை என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE