உக்ரைன் விவகாரம்: கவனமாகக் கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ்!

By காமதேனு

ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் உக்ரைனிலிருந்து வெளிவர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் இந்திய மணவர்கள், தங்களை மீட்கக்கோரி வேண்டுகோள் விடுக்கும் காணொலிகளைக் காங்கிரஸ் தலைவர்கள் பலர் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர். இந்தியர்களை உரிய காலத்தில் மீட்க மத்திய அரசு தவறிவிட்டது என்றும் அவர்கள் விமர்சித்துவருகின்றனர்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், “மீட்புத் திட்டங்கள் குறித்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு விரிவான தகவல்களை அளிக்க வேண்டும். நம் சொந்த மக்களை நாம் கைவிட்டுவிட முடியாது” என்றும் ட்வீட் செய்திருந்தார்.

அதேபோல், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா தவிர்த்துவிட்டதை விமர்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “வாக்கெடுப்பில் நாம் தவறியதைத் தொடர்ந்து, வரலாற்றின் தவறான பக்கத்தில் இந்தியா தன்னைப் பொருத்திக்கொண்டது எனப் பலரும் வருத்தம் தெரிவித்தனர்” என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ அறிக்கை மென்மையான மொழியைக் கொண்டிருக்கிறது. ஐநாவில் இந்திய அரசு தெரிவித்த கருத்தையே காங்கிரஸ் கட்சி அறிக்கையும் எதிரொலிக்கிறது.

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் வெளியுறவு விவகாரப் பிரிவின் தலைவருமான ஆனந்த் சர்மா வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், மின்ஸ்க் மற்றும் ரஷ்யா - நேட்டோ இடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய புரிந்துணர்வின் அடிப்படையில், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பகைமை வெடிப்பு மற்றும் ராணுவ மோதல், உலகுக்கே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் ஆனந்த் சர்மா குறிப்பிட்டிருக்கிறார். ஏறத்தாழ இதே வார்த்தைகளைத்தான் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடியும் குறிப்பிட்டிருந்தார்.

சசி தரூரின் விமர்சனம் குறித்து விளக்கமளித்த ஆனந்த் சர்மா, அது அவரது சொந்தக் கருத்து எனக் கூறினார்.

மம்தா பானர்ஜி

இதற்கிடையே, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகப் பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE