உக்ரைனிலிருந்து 470 பேருடன் மும்பை புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்

By காமதேனு

உக்ரைனில் உச்சகட்டமாக போர் நடந்து வரும் நிலையில், முதல் கட்டமாக 470 பேர் சிறப்பு விமானத்தில் இந்தியா திரும்புகின்றனர். இதில் 5 பேர் தமிழர்கள் இருக்கின்றனர்.

ரஷ்யா- உக்ரைன் இடையே போர் மூண்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அதே நேரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக மாணவர்கள் 5 ஆயிரம் பேர் உக்ரைனில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இன்று உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேரிடையாகவே பேசி, அவர்களை தைரியப்படுத்தினார்.

இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் கட்டமாக ஏர் இந்தியா விமானம் ருமேனியா சென்றடைந்தது. உக்ரைனிலிருந்து அங்கு வந்த இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் முதல் கட்டமாக ஏற்றி வருகிறது. 470 பேருடன் மும்பைக்கு விமானம் புறப்பட்டுள்ளது. இதில் 5 பேர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. 15க்கும் மேற்பட்ட கேரள மக்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிது நேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானமும் ருமேனியாவை சென்றடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE