போதைப்பொருள், மதுபானம், பரிசுப்பொருள்... மொத்தம் ரூ.1,000 கோடி: 5 மாநிலத் தேர்தலில் அரசியல் கட்சிகள் ‘தாராளம்’!

By காமதேனு

தேர்தல்களில் வாக்காளர்களைக் கவர அரசியல் கட்சிகள் வானத்தையே வளைக்கும் என்பார்கள். நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சைகளே கரன்ஸி மழை பொழியச் செய்து வாக்குகளைக் கவர முயன்றதைப் பார்த்தோம். 2024 மக்களவைத் தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும் எனக் கருதப்படும் 5 மாநிலத் தேர்தலில் இதைவிட பல மடங்கு பணப் பரிமாற்றம் இருக்கும்தானே!

அந்த வகையில், இதுவரை 1,000 கோடி ரூபாய் ரொக்கம், போதைப்பொருட்கள், மதுபானம், இலவசப் பொருட்கள் என ஏராளாமானவற்றைத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியிருக்கிறது. 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒப்பிட இது 4 மடங்கு அதிகம். அந்த ஆண்டில் இதே மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கைப்பற்றப்பட்ட தொகை 299.84 கோடி ரூபாய்தான்.

இதுதொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கை ஜனநாயகத் திருவிழாவில் பண நடமாட்டம் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. மொத்தம் 1,018 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், போதைப்பொருட்கள், மதுபானங்கள், அன்பளிப்புப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பஞ்சாப்தான். அங்கு மட்டும் 510.91 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அடுத்த இடத்தில் இருப்பது உத்தர பிரதேசம். அங்கு 307.92 கோடி ரூபாயைத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியிருக்கிறது. மணிப்பூரில் 167.83 கோடியும், உத்தராகண்டில் 18.81 கோடி ரூபாயும், கோவாவில் 12.73 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

ரொக்கப் பணத்தைப் பொறுத்தவரை 140.92 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், மதுபானங்களின் மதிப்பு தான் மலைக்க வைக்கிறது. 82 லட்சம் லிட்டர் மதுபானத்தைத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியிருக்கிறது. அதன் மதிப்பு 99.84 கோடி ரூபாய்.

569.52 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. பஞ்சாபில் போதைப் பொருள் கடத்தலும் பயன்பாடும் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. அங்கு மட்டும் 109 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. உத்தர பிரதேசத்தில் 8 லட்சம் லிட்டருக்கு அதிகமான மதுபானம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இவற்றுடன், 115.05 கோடி மதிப்பிலான உலோகங்களும், 93.5 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE