உக்ரைன் மீது தாக்குதல்- ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

By காமதேனு

உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் இன்றிரவு பிரதமர் மோடி பேசுகிறார் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார்.

நேட்டோ நாடுகளுடன் உக்ரைனை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, திடீரென இன்று அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். வான்வழிகளை அந்நாடு மூடிவிட்டதால் இந்தியர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் மற்றும் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா, உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முக்கியத்துவம் அளிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக தூதரகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 20 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உக்ரைனின் எல்லை நாடுகள் வழியே இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சிறிது நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE