நாளந்தா பல்கலை. புதிய வளாகம் திறப்பு முதல் ஹஜ் யாத்திரிகர்கள் உயிரிழப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

> நாளந்தா பல்கலை.யின் புதிய வளாகத்தை திறந்து வைத்த மோடி: பிஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த புதிய வளாகம் நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த புதிய வளாகத்துக்கு உள்ளே சோலார் மின் உற்பத்தி, குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு பசுமை வளாகமாக அமைக்கப்பட்டுள்ளது.

> பிரனாப் முகர்ஜியின் மகன் மீண்டும் காங்கிரஸில் இணைய விருப்பம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி, மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அபிஜித், அக்கட்சியின் பணிக்கலாச்சாரம் தனக்கு ஒத்துவராததும், தனக்கு பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாததும் தான் தாய் கட்சிக்கு திரும்புவதற்கான முதன்மையான காரணமாக தெரிவித்துள்ளார்.

> அசாம் வெள்ளத்தால் 1.61 லட்சம் மக்கள் பாதிப்பு: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 1.61 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 28-ம் தேதி முதல் அந்த மாநிலத்தில் பதிவான மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கரீம்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் வெள்ளத்தால் 41,711 குழந்தைகள் உட்பட சுமார் 1.52 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 225 கிராமங்கள் வெள்ள பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன.

> கண்ணூர் குண்டுவெடிப்பை ஒத்துக்கொண்ட கேரளா முதல்வர்: கண்ணூர் மாவட்டத்தின் வடக்கு பகுதியில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடந்ததாக கேரள முதல்வர் பினராய் விஜயன் புதன்கிழமை சட்டப்பேரவையில் ஒத்துக்கொண்டார். மேலும் இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

> ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து: காங்கிரஸ் எம்.பியும், இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு இன்று (ஜூன் 19) பிறந்தநாள். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரர் ராகுல் காந்தி. நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், வெற்றியடையவும் எனது வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

> “விக்கிரவாண்டியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்”: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் புதன்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “தேர்தலிலிருந்து அதிமுக விலகிக் கொண்டதால் விக்கிரவாண்டியில் திமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்று கூறினார்.

> சிதம்பரம் அருகே பல்கலை.கள் பெயரில் போலி சான்றிதழ்கள்: சிதம்பரத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பெயரில் போலிச் சான்றிதழ்களை தயாரித்த தீட்சிதர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்

> தலாய் லாமாவுடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, இந்தியா வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரம்சாலாவில் உள்ள தலாய் லாமாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சீனாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா, இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் தங்கி இருக்கிறார். தலாய் லாமாவை சந்திக்க செல்வாக்கு மிக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் நேற்று தரம்சாலா வந்தனர். டெக்சாஸின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் தலைமையிலான இக்குகுழுவில், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியும் உள்ளார்.

> நியூஸிலாந்து கேப்டன் பதவியிலிருந்து விலகிய கேன் வில்லியம்சன்: நியூஸிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். மேலும், 2024-25 ஆண்டுக்கான தேசிய அணி ஒப்பந்தமும் தனக்கு வேண்டாம் என அவர் அறிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றோடு நியூஸிலாந்து அணி வெளியேறிய நிலையில் அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

> மெக்காவில் கடும் வெப்பத்தால் 550 ஹஜ் யாத்திரிகர்கள் பலி: ஹஜ் யாத்திரையின் போது வெயில் காரணமாக குறைந்தது 550 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இது இந்த ஆண்டு வெளிப்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக புனித யாத்திரையின் கடுமையான தன்மையினை அடிக்கோடிட்டு காட்டுகிறது. உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள், இவர்களில் பெரும்பாலனவர்கள் வெப்பம் சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE