மகளிருக்குப் பிரதிநிதித்துவம் தராத மணிப்பூர்!

By காமதேனு

அரசியலில் பெண்களின் பிரநிதிதித்துவம் அதிகரிக்க வேண்டும் எனத் தொடர்ந்து குரல்கள் எழுகின்றன. ஆனால், மணிப்பூரில் அதெல்லாம் பொருட்டாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பதற்கு அம்மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் வேட்பாளர் பட்டியலே சாட்சி.

மணிப்பூரில் உள்ள 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 52 சதவீதத்தினர் பெண்கள். பெண்களைக் குறிவைத்து பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்கியிருக்கின்றன. அரசுப் பணியில் பெண்களுக்கு 33 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், பொதுப்போக்குவரத்து இலவசம் என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறது காங்கிரஸ். தகுதியான கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்று பாஜக தன் பங்குக்கு வாக்குறுதி தந்திருக்கிறது.

ஆனால், இந்த முறை போட்டியிடும் வேட்பாளர்களில் 265 வேட்பாளர்களில் 17 பேர்தான் பெண்கள். அதாவது 6.42 சதவீதம் மட்டுமே பெண் வேட்பாளர்கள்.

இதுதொடர்பாக என்டிடிவி இணைய செய்தி இதழிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர் பூனம் ராணி வாங்கேம், “எங்கள் சமூகத்தில், குற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, சிறிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இருந்தாலும் சரி, பெண்களே அதை முன்னெடுத்துச் செல்வதைப் பார்க்கலாம். ஆனால், எங்கள் அரசியல் முழுக்க முழுக்க ஆணாதிக்கம் கொண்டது. துணிந்து பேசும் பெண்களைத் தலையெடுக்க விடாது” என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், தற்போது தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மணிப்பூரில் அடிக்கடி போராட்டங்கள், கடையடைப்புகள், போலி என்கவுன்டர்கள் நடக்கும் என்றும், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அதெல்லாம் குறைந்திருப்பதாகவும் மணிப்பூர் மாநிலப் பெண்கள் சிலர் கூறுகிறார்கள். அதேவேளையில் அரிசி, காஸ் சிலிண்டர் என அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் பெண்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

2017 மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வென்றன. எனினும், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்புக்கு பாஜக வந்தது. பீரேன் சிங் மணிப்பூரின் முதல் பாஜக முதல்வரானார்.

பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 என இரண்டு கட்டமாக இந்த முறை தேர்தலைச் சந்திக்கிறது மணிப்பூர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE