ஐந்து மாநிலத் தேர்தலின்போது பொது அமைதியைக் குலைக்க முயற்சி?

By காமதேனு

தடைசெய்யப்பட்ட சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (எஸ்எஃப்ஜே) அமைப்புடன் தொடர்புடைய ‘பஞ்சாப் பாலிட்டிக்ஸ் டிவி’ எனும் சேனல் மீதும் உளவுத் துறையின் கண்காணிப்பின்கீழ் வந்திருக்கிறது. இதையடுத்து இந்த சேனல் தொடர்பான செயலிகள், சமூகவலைதளக் கணக்குகளை முடக்க தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்துவரும் நிலையில், அந்த சேனல் இணைய தள ஊடகங்களைப் பயன்படுத்தி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதாக உளவுத் துறையினர் தெரிவித்திருப்பதாக என தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது தடைசெய்யப்படும் செயலிகள், இணையதளங்கள், சமூக ஊடகக் கணக்குகள் சமூக ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் தகவல்களைப் பரப்பியதாகக் கூறியிருக்கும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சக அறிக்கை, அந்தத் தகவல்கள் இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, தேசப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஊறு விளைவிக்கக்கூடியவை என்றும் குறிப்பிட்டிருக்கிறது. தற்போது நடந்துவரும் தேர்தலை ஒட்டி, கவனம் ஈர்ப்பதற்காகப் புதிதாக இந்தச் செயலிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதேவேளையில், தற்போது மத்திய அரசு விழிப்புடன் இருப்பதாகவும், இந்தியாவின் ஒட்டுமொத்த தகவல் சூழலின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய எந்தச் செயலையும் முறியடிக்கவும் உறுதியுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து செயல்பட்டுவரும் சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் பிரிவினைவாத அமைப்பு, காலிஸ்தான் தனிநாடு கேட்கும் அமைப்பாகும். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இந்த அமைப்புக்கு நிதியுதவி வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். 2021 டிசம்பரில் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஜெர்மனியில் கைதுசெய்யப்பட்ட ஜஸ்வீந்தர் சிங் முல்தானி, சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE