பிரசாந்த் கிஷோர் மீது வருத்தம்: கோவா திரிணமூல் தலைவர் பகிரங்கக் குற்றச்சாட்டு!

By காமதேனு

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் குழு தங்கள் கட்சி வேட்பாளர்களைக் கைவிட்டுவிட்டதாக அம்மாநில திரிணமூல் காங்கிரஸ் தலைவர் கிரண் கண்டோல்கர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மார்ச் 10-ல் வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன. மகாராஷ்ட்ரவாதி கோமந்தக் கட்சியுடன் (எம்ஜிபி) கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சந்தித்தது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியைத் தொடர்ந்துவரும் ஐ-பேக் நிறுவனம், கோவா தேர்தலிலும் அக்கட்சியாகப் பணிபுரிந்துவந்தது.

மம்தா பானர்ஜி

எனினும், கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் இளம் தலைவர்களுக்கும் இடையில் கசப்புணர்வு தோன்றும் வகையில் ஐ-பேக் குழுவினரின் நடவடிக்கைகள் இருந்ததாகச் சமீபகாலமாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோரிடம் நெருக்கம் காட்டுபவர். பிரசாந்தின் யோசனைப்படிதான், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்று அபிஷேக் பானர்ஜி பேச ஆரம்பித்தார் எனச் சொல்லப்படுகிறது.

கோவாவிலும், தேர்தல் வியூகங்களில் ஐ-பேக் குழுவினர் பரிந்துரைத்த யோசனைகள் திரிணமூல் காங்கிரஸார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகச் செய்திகள் வெளியாகின. திரிணமூல் காங்கிரஸை கோவாவில் பலம்பெறச் செய்ய ஐ-பேக் பயன்படுத்திய முதல் அஸ்திரம், பிற கட்சித் தலைவர்களையும், சுயேச்சை எம்எல்ஏ-க்களையும், பல்வேறு துறை பிரபலங்களையும் கட்சியில் சேர்க்கும் முயற்சிதான். அதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் லூசினோ ஃபெலேரோ போன்ற வெகு சிலரைத்தான் ஐ-பேக்கால் அழைத்துவர முடிந்தது. டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸைக் கட்சியில் சேர்க்க முடிந்தாலும், பாடகர் லக்கி அலி போன்றோர் ஐ-பேக் வீசிய வலையில் சிக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் ஆரம்பம் முதலே, ஐ-பேக் குழுவினர் மீது கோவா திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கிரண் கண்டோல்கர் தங்கள் வேட்பாளர்களை ஐ-பேக் குழு கைவிட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டினார். “திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எல்லா வேட்பாளர்களுக்கும் ஐ-பேக் குழுவால் ஏதேனும் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து வேட்பாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக, கட்சித் தொண்டர்களிடம் நான் ஆலோசித்தேன். அவர்கள் கட்சியின் மாநிலத் தலைமை பொறுப்பிலிருந்து விலகிவிடுமாறு எனக்கு அறிவுறுத்தினர். எனினும், கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நான் விலகப் போவதில்லை. ஆனால், பிரசாந்த் கிஷோர் மீதும் அவரது ஐ-பேக் நிறுவனம் மீதும் நான் வருத்தம் அடைந்திருக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

அல்தோனா தொகுதியில் கிரண் கண்டோல்கர் போட்டியிட்டார். அவரது மனைவி கவிதா திவிம் தொகுதியில் திரிணமூல் கட்சி சார்பில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE