மேற்கு வங்க ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு? - பிரதமர் மோடி அரசுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே 7 கேள்வி

By KU BUREAU

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி அரசுக்குகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் சிக்னலுக்காக காத்திருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் அதே பாதையில் வந்த சரக்கு ரயில் மோதியது.இந்த பயங்கர விபத்தில் 10 பேர்உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து காங்கிரஸ்தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் கூறி யிருப்பதாவது:

ஒவ்வொரு முறை ரயில் விபத்துநிகழும்போதும், மோடி அரசின்ரயில்வே அமைச்சர், கேமராக்களின் ஒளியில் அந்த இடத்தை அடைந்து, எல்லாம் சரியாகிவிட்டது போல் நடந்து கொள்கிறார். இந்த விபத்துக்கு யார் பொறுப்பு பிரதமரே சொல்லுங்கள். அமைச்சரா அல்லதுநீங்களா?

எங்களிடம் 7 கேள்விகள் உள்ளன. இதற்கு மோடி அரசு பதில் அளிக்க வேண்டும்.

ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த கோர விபத்துக்கு பிறகும் ஏன் இதுவரை 1 கி.மீ. தூரம் கூட கவச் விபத்து தடுப்பு அமைப்பு புதிதாக நிறுவப்படவில்லை?

ரயில்வே துறையில் சுமார் 3 லட்சம் பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன? கடந்த 10 ஆண்டுகளாக அவை ஏன் நிரப்பப்படவில்லை?

2022-ம் ஆண்டு என்சிஆர்பி அறிக்கையின்படி 2017 முதல் 2021 வரை மட்டும் ரயில் விபத்துகளில் 1 லட்சம் பேர் இறந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

ஆள் பற்றாக்குறையால் லோகோ பைலட்டுகள் நீண்ட நேரம் பணியாற்றுவது, விபத்துகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என ரயில்வே வாரியமே ஒப்புக் கொண்டுள்ளது. பிறகு ஏன் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை?

நாடாளுமன்ற நிலைக்குழு தனது 323-வது அறிக்கையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் (சிஆர்எஸ்) பரிந்துரைகளை புறக்கணித்துள்ளதாக ரயில்வே துறையை விமர்சித்துள்ளது. 8% - 10% விபத்துகளை மட்டுமே சிஆர்எஸ் விசாரிக்கிறது. சிஆர்எஸ் ஏன் பலப்படுத்தப்படவில்லை?

ரயில்வே பாதுகாப்பு நிதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். சிஏஜி அறிக்கையின்படி இந்த நிதி 75% குறைக்கப்பட்டது ஏன்? அதே நேரத்தில் தேவையற்ற செலவுகளுக்கும், வசதி வாய்ப்புகளுக்கும் ரயில்வேஅதிகாரிகள் இந்தப் பணத்தைஏன் பயன்படுத்துகின்றனர்?

பொதுவான ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்வதற்கு அதிகம் செலவிட வேண்டியிருப்பது ஏன்?இந்த வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது ஏன்?

கடந்த ஆண்டு சீட் கிடைக்காமல் 2.70 கோடி பேர் தங்கள் முன்பதிவை ரத்து செய்துள்ளனர். ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கும் கொள்கையின் விளைவுதான் இது.

2017-18-ம் ஆண்டு பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டது. எந்த வகையிலும் பொறுப்பேற்பதை தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா?

தவறுகளுக்கு உயர் நிலையில் இருப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு கார்கே தனது பதிவில் கூறியுள்ளார்.

சீரமைப்பு பணி முடிந்தது: விபந்து நடந்த பகுதியில் சேதமடைந்த ரயில் தடத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நேற்று முன்தினம் மாலை முதல்நடைபெற்றன. இந்நிலையில் சேதமடைந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் மாற்றப்பட்டன. தடம் சீரமைக்கப்பட்ட நிலையில் இந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு சீல்டா ரயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்து சேர்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE