மணிப்பூரை மோடி சிதைத்துவிடுவார்: ராகுல் காந்தி கடும் தாக்கு!

By காமதேனு

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் அம்மாநிலத்துக்குச் சென்றிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியும் பாஜகவினரும் மேட்டிமை மனோபாவத்துடன் மணிப்பூருக்கு வருகிறார்கள். உங்கள் மாநிலத்தை மோடி சிதைத்துவிடுவார்” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தலைநகர் இம்பாலில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “மணிப்பூரைவிட உத்தர பிரதேசம் பெரிய மாநிலம்தான். ஆனால், எங்களைப் பொறுத்தவரை உத்தர பிரதேச மக்களும் மணிப்பூர் மக்களும் ஒன்றுதான். உத்தர பிரதேசம், மணிப்பூர் இரண்டு மாநிலங்களின் மொழி, பன்மைத்துவம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றை நாங்கள் சரிசமமாகப் பாதுகாப்போம். அதில் எங்களிடம் இரட்டை நிலைப்பாடு கிடையாது” என்று கூறினார்.

மேலும், “பாஜகவின் கொள்கைக்கு எதிராகவும் நாங்கள் போராடிவருகிறோம். அவர்கள் ஒரே சித்தாந்தம், ஒரே கருத்தாக்கம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உயர்ந்தது என அவர்கள் நினைக்கிறார்கள்” என்று கூறிய ராகுல், கடந்த 5 ஆண்டுகளில் மணிப்பூரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம், ஜனநாயக விழுமியங்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திவருவதாகக் குற்றம்சாட்டினார்.

“எந்தப் புரிதலும் இல்லாமல் மணிப்பூருக்கு பாஜகவினர், ஆர்எஸ்எஸ்காரர்கள் வருகிறார்கள். அவர்கள் மேட்டிமை மனோபாவத்துடன் இங்கு வருகிறார்கள். நான் இங்கு வரும்போது மேட்டிமை மனோபாவத்துடன் அல்ல, மனிதாபிமானத்துடன் வருகிறேன். அதுதான் எங்கள் இருவருக்கும் இடையிலான வித்தியாசம். உங்கள் கருத்தாக்கம், கலாச்சாரம் மற்றும் மொழியை வளர்த்துக்கொள்ள நான் இங்கு வருகிறேன். பிரதமரோ, மேட்டிமை மனோபாவத்துடன் இங்கு வருகிறார். அவர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் உங்களிடம் பேசுகிறார்” என்றும் ராகுல் பேசினார்.

“எங்கு சென்றாலும் ஏகப்பட்ட வாக்குறுதிகளை வழங்கும் மோடி, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, எல்லோருக்கும் மாதம் 15 லட்ச ரூபாய் வழங்குவதாக அளித்த வாக்குறுதியைப் பற்றி எதுவும் பேசாமல் தவிர்க்கிறார்” எனக் குறிப்பிட்ட ராகுல், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மற்றும் இரண்டு மூன்று பெரிய நிறுவனங்களுக்குப் பனைத் தோட்டங்கள் கிடைக்க உதவுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

“பனை எண்ணேய் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் உங்கள் எதிர்காலத்தை மோடி சிதைக்கவிருக்கிறார். அழகான உங்கள் மாநிலத்தை அவர் சிதைக்க விரும்புகிறார். மணிப்பூருக்கான எங்கள் திட்டம் இப்படியானது அல்ல. பாபா ராம்தேவுக்கு உதவி, மக்களைத் தண்டிப்பவர்கள் அல்ல நாங்கள்” என்றும் மோடியைக் கடுமையாக விமர்சித்தார்.

பெருந்தொற்றுக் காலத்தில், பாத்திரங்களைத் தட்டுவதும், மொபைல் போன்கள் மூலம் வெளிச்சம் அடிக்கச் செய்வதுதான் மோடியின் தீர்வாக இருந்தது என்று கூறிய ராகுல், “ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் வென்டிலேட்டர்களையும் அவரால் வழங்க முடியவில்லை. மணிப்பூரிலும் அதுதான் நடந்தது. போதிய மருத்துவ வசதிகள் இன்றி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்” என்று குறிப்பிட்டார்.

60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூருக்கு பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. மார்ச் 10-ல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE