அன்று கேரளா இளைஞர்... இன்று கர்நாடக இளைஞர் மீட்பு

By காமதேனு

கர்நாடகாவின் சிக்கபல்லபூரில் உள்ள நந்திமலையில் சிக்கிய இளைஞரை இந்திய விமானப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்கிற மலைத்தொடரில் அண்மையில் மலையேற்றம் சென்ற 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை பிளவு ஒன்றில் சிக்கிக்கொண்டார். 43 மணி நேரத்துக்கு பின்னர் அந்த இளைஞர் பத்திரமாக இந்திய ராணுவத்தினரால் மீட்கப்பட்டார். இதற்கு ரூ.75 லட்சத்தை கேரள அரசு செலவு செய்திருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது கர்நாடகாவில் இதேபோல் சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவில் பொறியியல் படித்து வரும் டெல்லியைச் சேர்ந்த நிஷாங்க் என்ற மாணவர் தனியாக நந்திமலைக்கு தனியாக மலையேற்றம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். பின்னர் அந்த மாணவரே, தான் சிக்கிக்கொண்டிருப்பது குறித்து சிக்கபல்லாபூர் காவல்துறையினருக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இளைஞர் தரையில் இருந்து 300 அடி உயரத்தில் சிக்கியிருந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை. பின்னர் விமானப்படை உதவியை நாடியது காவல்துறை. இதையடுத்து. எம்ஐ17 ரக ஹெலிகாப்டரில் சென்ற விமானப்படை வீரர்கள், மலையில் சிக்கியிருந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE