கல்யாணப் பரிசாக ஜனநாயகக் கடமை: கலக்கும் மணப்பெண்கள்!

By காமதேனு

உத்தரபிரதேச தேர்தலில் புதுமணப்பெண்கள் சிலர், மணவிழா அலங்கரிப்புடன் வாக்குச்சாவடிக்கு விரைந்து வாக்களித்து வருகின்றனர்.

ஜனநாயக திருநாட்டில் வாக்களிப்பது என்பது உரிய வயதினர் அனைவரின் முக்கியக் கடமையாகும். தேர்தலில் பொதுமக்களின் பங்களிப்பினை அதிகரிக்கச் செய்யவும், வாக்குப்பதிவினை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் முதல் தன்னார்வ அமைப்புகள் வரை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போதும், மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோர் தங்களது தனிப்பட்ட சிரமங்களைப் பாராது வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிச் சென்றனர். இதுதவிர்த்து, ஆம்புலன்சில் வாக்குச்சாவடி வந்த நோயாளி, ஓட்டி வந்த பேருந்தை வாக்குச்சாவடிக்கு செலுத்திய ஓட்டுநர், பயணிகளிடம் அனுமதி பெற்று வாக்களித்து திரும்பியது உள்ளிட்ட ஆச்சரிய வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வலம்வருகின்றன.

இந்த வரிசையில் இன்றைய(பிப்.20) தினம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட பதிவின்போதும் சுவாரசியங்கள் அரங்கேறி வருகின்றன. சுப தினம் என்பதால் மணம் முடித்த ஜோடிகள் பலர் கல்யாண மேடையிலிருந்து நேரடியாக வாக்குச்சாவடி சென்றனர். ஃபிரோசாபாத்தை சேர்ந்த ஜூலி என்ற புதுமணப்பெண் மாமியார் வீட்டுக்கு சேல்லும் வழியில், வாக்களித்துவிட்டுதான் வருவேன் என்று அடம்பிடித்தார்.

மணக்கோலத்தில் கணவன் சகிதம் அவர் வாக்களித்து சென்றது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதேபோல மெஹோபாவைச் சேர்ந்த கீதா என்ற மணப்பெண்ணும், முதல் முறையாக வாக்களிக்கும் பரவசத்தில் வாக்குச்சாவடி வந்திருந்தார். மணநாளை இரட்டை மகிழ்ச்சிக்கு ஆளாக்கியதுடன், ஜனநாயகக் கடமையாற்றும் வாய்ப்பினை மறக்க முடியாத கல்யாணப் பரிசாகவும் இவர்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE