நீட் வழக்கு அப்டேட் முதல் சாதிய வன்முறைக்கு எதிராக அதிரடி பரிந்துரைகள் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

> நீட் தேர்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?: இந்த ஆண்டு நடத்தப்பட்ட இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்ததை எதிர்த்தும், முறைகேடுகள் நடந்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “நீட் நுழைவுத் தேர்வில் 0.001% அலட்சியம்கூட இருக்கக் கூடாது. அதுபோன்ற அலட்சியம் இருப்பதாக தெரியவந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மற்றம் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

> கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு தொடக்கம்: கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அடுத்தகட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

> “அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள்”: “தமிழகத்தில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக, அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும்,” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

> “அதிமுக அல்ல... பாஜகவே நம் எதிரி” - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு: “இந்த இடைத்தேர்தலில் அதிமுக நிற்கவில்லை. அதிமுக அல்ல நமக்கு எதிரி. இந்த தேர்தலைப் பொறுத்தவரை, மோடி தலைமையில் இருக்கிற கூட்டணிதான் நமக்கு எதிரி. பாஜக என்பது ஒரு பாசிச சக்தி. தமிழகத்தில் பாஜகவை வளரவிட்டால் இந்த சமுதாயமே கெட்டுபோய் விடும்” என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

இதனிடையே, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிசாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதை அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது” என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

> திமுகவில் மஸ்தானுக்கு மீண்டும் கட்சிப் பதவி: திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை கடந்த 11-ம் தேதி அப்பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக தலைமை உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, திமுகவில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதாக சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள். அத்துடன், விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடியும் மஸ்தானும் இருதுருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேறு வரவிருப்பதால் உட்கட்சிப் பிரச்சினைகள் திமுகவின் வெற்றிக்கு பாதகம் உண்டாக்கிவிடக் கூடாது என்பதற்காக விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக மஸ்தானை நியமித்திருக்கிறது திமுக தலைமை. விக்கிரவாண்டி தொகுதியில் சுமார் 20 ஆயிரம் முஸ்லிம்கள் வாக்காளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

> சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த 2 வாரத்தில் 6-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் விமான நிலையத்தில் பாதுகாப்பும், சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

> ரயில்வே அமைச்சர் பதவி விலக காங். வலியுறுத்தல்: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கார்கே, மத்திய அரசுக்கு 7 கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ரயில் விபத்து ஏற்படும் போதெல்லாம், மோடி அரசின் ரயில்வே அமைச்சர், கேமராக்களின் ஒளியில் அந்த இடத்தை அடைந்து, எல்லாம் சரியாகிவிட்டது போல் நடந்து கொள்கிறார். இந்த விபத்துக்கு பொறுப்பு, பிரதமர் நரேந்திர மோடியா அல்லது ரயில்வே அமைச்சரா?

பாலாசோர் போன்ற ஒரு பெரிய விபத்துக்குப் பிறகும்கூட, ஏன் ஒரு கிலோமீட்டர் தூரம் கூட "கவாச்" எனப்படும் ரயில் மோதல் தடுப்பு அமைப்பு சேர்க்கப்படவில்லை? ரயில்வேயில் ஏன் கிட்டத்தட்ட 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன? கடந்த 10 ஆண்டுகளில் காலி பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

> வயநாட்டில் மீண்டும் போட்டி? - ஆனி ராஜா விளக்கம்: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியை கைவிடுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ மூத்த தலைவர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

> “எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை” - தவெக அறிவிப்பு: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் தவெக போட்டியிடாது” என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

> சாதிய வன்முறைகளை தவிர்க்க ஒருநபர் குழுவின் பரிந்துரைகள்: தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு தமிழக அரசால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையை தயார் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சமர்பித்தது.

அதில், பள்ளி பெயர்களில் இருக்கும் கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் நலன் போன்ற பெயர்களை நீக்கி அரசுப் பள்ளிகள் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்.
கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளையும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரும் முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிதாக தொடங்கப்படும் பள்ளியின் பெயரிலும் சாதி பெயர் இடம்பெறாதவாறு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் உதவித்தொகை பெறும் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் அறைக்கு அழைத்து வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவுகளை மீறும் ஆசிரியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதையும், நெற்றியில் திலகம் இடுவதையும் தடை செய்ய வேண்டும். சாதியை குறிக்கும் வகையில் வண்ணம் பூசப்பட்ட சைக்கிள்களில் வருவதையும், சாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதற்கு இணங்க தவறினால், மாணவரின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE