தங்கக் கடத்தலில் சிக்கிய கேரளா சொப்னாவுக்கு நடந்த சோகம்

By காமதேனு

கேரளாவில் என்ஜிஓ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஒரேநாளில், தங்க கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருக்கும் சொப்னாவின் வேலை பறிக்கப்பட்டுள்ளது.

கேரள தங்க கடத்தலில் சிக்கிய சொப்னா என்ற பெண் இந்தியா முழுதும் பிரபலமானார். கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சொப்னா, ஒரு வருடத்துக்கு மேல் சிறையில் இருந்தவர், தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் தாய், குழந்தைகளுடன் வசித்து வரும் சொப்னாவுக்கு, டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எச்ஆர்டிஎஸ் என்ற என்ஜிஓ நிறுவனத்தில் மாதம் 43 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. இந்த நிறுவனம் இந்தியா முழுதும் உள்ள ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறது.

இந்த நிறுவனம் தற்போது, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள 300 ஆதிவாசி குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனிடையே, இடுக்கி மாவட்டம், தொடுபுழாவில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் நேற்று சொப்னா பணியில் சேர்ந்துள்ளார். இது குறித்து அவர், “இந்த வேலை தன்னுடைய வாழ்க்கையில் 2-வது பாகத்தின் தொடக்கம். தற்கொலை எண்ணத்தில் இருந்த தனக்கு புதிய வேலை கிடைத்தது பெரிய விஷயம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சொப்னாவுக்கு இடி விழுந்ததுபோல் வேலை பறிக்கப்பட்டுள்ளது. அவரை வேலையில் இருந்து நீக்க உத்தரவிட்டு இருப்பதாக, எச்ஆர்டிஎஸ் நிறுவன தலைவர் கிருஷ்ணகுமார் கூறியுள்ளார். “தன்னுடைய அனுமதி இல்லாமல் சொப்னாவுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு சம்பளம் வழங்கியிருந்தால் அதைத் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். வேலையில் சேர்ந்த ஒரேநாளில் வேலை பறிக்கப்பட்டது சொப்னாவை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE