இனி தனியார் உணவகங்களுக்கு அனுமதி இல்லை... இலவச உணவகங்கள்தான்!

By காமதேனு

திருப்பதியில் தனியார் உணவகங்களை மூடிவிட்டு, இலவச உணவங்களைத் திறக்க முடிவெடுத்திருக்கிறது திருமலை திருப்பதி தேவஸ்தானம். இலவச அன்ன பிரசாதம் உணவகங்களையும், கியோஸ்க் எனப்படும் சுயசேவை உணவு விநியோக அமைப்புகளையும் நிறுவப்போவதாக தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. மூடப்படும் உணவகங்களின் உரிமையாளர்கள், வேறு தொழில்களை திருமலையிலேயே நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.

சுயாதீனமாக இயங்கும் அறக்கட்டளையான திருப்பதி தேவஸ்தானம், திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில் உட்பட மொத்தம் 12 கோயில்களை நிர்வகிக்கிறது. மொத்தம் 14,000 பேர் இங்கு பணி செய்கிறார்கள். ஏற்கெனவே இலவச உணவகங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று (பிப்.17) திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 2023 நிதியாண்டில் கோயில் நிர்வாகம் மற்றும் அது தொடர்பான செலவுகளுக்காக 3,096 கோடி ரூபாய் பட்ஜெட் என ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியிருக்கிறது. மும்பையில் ஸ்ரீவரி கோயிலை நிறுவவதற்கான நிலம் கோரி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயை இன்னும் ஒரு மாதத்துக்குள் சந்திக்கப்போவதாகவும் திருப்பதி தேவஸ்தானம் கூறியிருக்கிறது.

தரிசனம் மற்றும் சேவைக் கட்டணம் (ஆர்ஜித சேவை) உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளையும் தேவஸ்தானம் மறுத்திருக்கிறது. “நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றுத் தீவிரம் குறைந்திருக்கிறது. அரசின் வழிகாட்டுதல்களைப் பொறுத்து, ஆர்ஜித சேவை மற்றும் தரிசனம் மீண்டும் தொடங்கப்படும்” என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியிருக்கிறார். 2020 மார்ச் முதல் ஆர்ஜித சேவை நிறுத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பரிந்துரையின்படி 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குழந்தைகளுக்கான மருத்துவமனை தொடங்கவும் அறக்கட்டளை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைக்கென தனியார் மருத்துவமனைகளை நிறுவ 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE