“சங்கிகளுக்கு அஞ்ச மாட்டோம்!” - தெறிக்கவிடும் தேஜஸ்வி

By காமதேனு

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவினரால் லாலு பிரசாத் யாதவ் விமர்சனத்துக்குள்ளாகிவரும் நிலையில், அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் லாலுவின் மகனும் பிஹார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், “சங்கிகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்” என அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஐந்தாவது வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரை பாஜக கடுமையாக விமர்சித்துவருகிறது.

இது தொடர்பாக இன்று ட்வீட் செய்திருந்த பிரியங்கா காந்தி, “பாஜக முன்பு பணிய மறுப்பவர்கள், அக்கட்சி முன்னெடுக்கும் முத்திரை குத்தும் அரசியல் போக்கால் தொல்லைக்குள்ளாக்கப்படுகிறார்கள். அரசியலில் சமரசமற்ற வழிகளில் இயங்கிவருவதால் லாலு பிரசாத் தாக்குதலுக்குள்ளாகிறார். அவருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கும் தேஜஸ்வி யாதவ், “நன்றி பிரியங்கா அவர்களே. ஒடுக்குமுறை செய்பவர்கள், மக்களைத் துன்புறுத்துபவர்கள், பிரிவினைகளை உருவாக்குபவர்களுக்கு எதிராக லாலு எப்போதுமே போராடினார். நீதி வெல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நாங்கள் சங்கிகளுக்கு அஞ்ச மாட்டோம்” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸுக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கும் இடையில் சுமுக உறவு நிலவாத சூழலில், பிரியங்காவும் தேஜஸ்வியும் இப்படி பரஸ்பர ஆதரவு நிலைப்பாட்டில் ட்வீட் செய்துவருவது கவனிக்கத்தக்கது.

2020 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 70 தொகுதிகளைக் கேட்டு வாங்கியது. அத்தனை தொகுதிகளைத் தர தேஜஸ்வி முன்வராத நிலையில், அப்போது சிறையில் இருந்த லாலு பிரசாத் வரை பஞ்சாயத்து சென்றது. அதன் பின்னர்தான் அத்தனைத் தொகுதிகளைத் தர தேஜஸ்வி முன்வந்தார். எனினும், வெறும் 19 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அந்தத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனதற்குக் காங்கிரஸ் காட்டிய பிடிவாதம்தான் காரணம் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கோபம் கொண்டது.

சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், தேசியப் பிரச்சினைகளில் காங்கிரஸுக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவளிக்கும் என்றும், பிஹாரில் தனியாகத்தான் போட்டியிடுவோம் என்றும் குறிப்பிட்டார்.

“காங்கிரஸ் சித்தாந்தத்துக்குத் துணை நிற்கிறோம். ஆனால், ஓட்டுநர் இருக்கையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அல்லது திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி போன்றவை தான் இருக்க வேண்டும்” என்றும் தேஜஸ்வி கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE