2008-ல் குண்டுவெடிப்பு; 2022-ல் 38 பேருக்கு தூக்கு தண்டனை!

By காமதேனு

கடந்த 2008-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு அடுத்தடுத்து 21 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 56 பொதுமக்கள் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் 77 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த 8-ம் தேதி நீதிபதி ஏ.ஆர்.படேல் அளித்த தீர்ப்பளித்தில், 49 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டதோடு, 28 பேர் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த இரு தரப்பு விசாரணைகளும் முடிவடைந்தன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி ஏ.ஆர்.படேல், குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், எஞ்சிய 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE