இழப்பை ஈடுசெய்ய மின் நுகர்வு கட்டணத்தை உயர்த்தவும்!

By காமதேனு

இழப்புகளை ஈடு செய்ய மின் நுகர்வு கட்டணத்தை உயர்த்த மின்சார விநியோக நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதனால், மின் கட்டணங்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுக்கு, மத்திய மின் துறை அமைச்சகம் விளக்க குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “பல்வேறு மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் தாமதமான கட்டண விவரங்களை தாக்கல் செய்கின்றன. பல மாநில பகிர்மான நிறுவனங்கள், செலவுகளை பிரதிபலிக்காத கட்டண விவரங்களை அளித்து இருக்கின்றன. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 17 மாநிலங்கள் மட்டுமே 2021, 2022-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட கட்டண விவரங்களுடன் ஆர்டர்களை அளித்து இருக்கின்றன. 12 மாநிலங்கள் 2021 ஏப்ரல், நவம்பர் மாதங்களுக்கு இடையே ஆர்டர் விவரங்களை தந்து இருக்கின்றன. 7 மாநிலங்கள் கட்டண விவரங்களை வழங்கவில்லை.

குறைக்கப்பட்ட விலையில் மின்சாரம் வழங்க விநியோக நிறுவனங்களுக்கு உத்தரவிடும் மாநில அரசுகள், மானியங்களை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. இதனால் மாநில அரசுகளின் கடன் பாக்கி, ரூ.59,489 கோடியாக அதிகரித்துள்ளது. தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள் இதில் மிக மோசமாக செயல்படுகின்றன.

நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட மின் பகிர்மானக் கழகங்கள் அதிக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதால், அவற்றின் வட்டி சுமை அதிகரிக்கிறது. நாடு முழுவதுமாக 29 மின் விநியோக நிறுவனங்கள், எதிர்மறை நிகர மதிப்பை கொண்டு இருக்கின்றன.

2019-2020-ம் ஆண்டில் மட்டும் 5.2 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதே கால கட்டத்தில் மின் விநியோக நிறுவனங்கள் 4.9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மின் விநியோக நிறுவனங்களின் மோசமான பில்லிங் மற்றும் வசூல் திறன் நிதிநிலை மோசம் அடைய ஒரு காரணம். எனவே, அதிகரித்து வரும் செலவீனங்களை சமாளிக்க மின்விநியோக நிறுவனங்கள் சரியான கட்டணத்தை உயர்த்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய மின் துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில், மின் கட்டணம் உயர வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE