முன்னாள் என்எஸ்இ எம்டி சித்ரா ராமகிருஷ்ணா இடங்களில் ஐடி ரெய்டு!

By காமதேனு

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தேசிய பங்குச்சந்தையின் தலைமை இயக்குநராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர், 20 வருடங்களாக முகம் தெரியாத இமயமலை சாமியார் ஒருவருக்கு ஈமெயில் மூலம் பல்வேறு முக்கியமான தரவுகளைப் பகிர்ந்து, அவர் கூறும் முடிவுகளை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிறைவேற்றி வந்துள்ளது செபி அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல், தனக்கு கீழ் பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும், யாருக்குப் பதவி உயர்வு அளிக்க வேண்டும், யாரை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது போன்ற அனைத்து முடிவுகளையும் சாமியார் கட்டளையிட்டு செய்துள்ளார் சித்ரா.

மேலும், சாமியார் உத்தரவின் பெயரில், பால்மர் லாரி நிறுவனத்தில் 15 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்த ஆனந்த் சுப்ரமணியனுக்கு கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார் சித்ரா ராமகிருஷ்ணா. அப்போது, விதிகளை மீறி தலைமை செயல்பாட்டு அதிகாரியாக ஆனந்த் சுப்ரமணியனை நியமித்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது. தொடர்ந்து, தேசிய பங்குச்சந்தையின் விதிகளில் முறைகேடுகள் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு செபி, தேசியபங்குச்சந்தை மற்றும் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அபராதம் விதித்தது.

இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சேலையூர் மற்றும் அண்ணாசாலையில் உள்ள வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சித்ரா ராமகிருஷ்ணா மீதான புகார்கள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE