“நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார்” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By KU BUREAU

புதுடெல்லி: "24 லட்சம் மாணவர்களின் எதிர்காலமான நீட் மோசடி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காக்கிறார்" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "24 லட்சம் மாணவர்களின் எதிர்காலமான நீட் மோசடி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காக்கிறார். பிஹார், குஜராத் மற்றும் ஹரியாணாவில் செய்யப்பட்டுள்ள கைதுகள், நீட் தேர்வில் திட்டமிடப்பட்ட வகையில் முறைகேடுகள் நடந்துள்ளதையும், பாஜக ஆளும் மாநிலங்கள் வினாத்தாள் கசிவின் மையமாக மாறியிருப்பதையும் தெளிவாக காட்டுகிறது.

இந்திய நீதித் துறையில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். எதிர்க்கட்சியாக எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும் அதேவேளையில், வீதிகளில் இருந்து இளைஞர்களின் குரலை நாடாளுமன்றம் வரை வலுவாக எழுப்பி, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இதுபோன்ற கடுமையான கொள்கைகளை வகுக்க உறுதி எடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, மே 5-ம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.

முன் எப்போதும் இல்லாத அளவு இந்த முறை 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்ணை பெற்றிருந்தனர். ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இது முறைகேடு நடத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பியது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட்டது. அதேநேரம், பிஹார், குஜராத் மற்றும் ஹரியானாவில் நீட் தேர்வு முறைகேடு செய்தததாக சிலரை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE