மத்தியபிரதேசத்திலும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்!

By காமதேனு

கர்நாடகாவைத் தொடர்ந்து மத்தியபிரதேசம் மாநிலத்திலும் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தை மையங்கொண்டு எழுந்த, ஹிஜாப் ஆதரவு - எதிர்ப்பு போராட்டம் காரணமாக மாநிலம் முழுக்கவுமே பதட்டம் தொற்றியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக இடைக்கால உத்தரவினை வெளியிட்டது. ஹிஜாப் வழக்கினை தினசரி அடிப்படையில் கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதற்கிடையே திங்கள் முதல் திறக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஹிஜாப்புடன் வந்த மாணவிகளை, பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள் தடுத்தனர். இதனால் ஹிஜாப் அகற்ற மறுத்து, கணிசமான மாணவிகள் வீடு திரும்பியதும் நடந்தது. கர்நாடகத்தை தொடர்ந்து இன்னொரு பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசம் மாநிலத்திலும் ஹிஜாப் பிரச்சினை எழுந்துள்ளது.

இங்குள்ள தாடியாவில் செயல்படும் கல்லூரி ஒன்றில், ஹிஜாப் அணிந்த மாணவிகள் தடையின்றி அனுமதிக்கப்படுவதாய், வெளியான தகவலை அடுத்து அங்கு விஹெச்பி அமைப்பை சேர்ந்தோர் போராட்டம் நடத்தினர். விஹெச்பி அமைப்பின் மகளிர் பிரிவான துர்க வாஹினியின் சார்பிலான போராட்டத்தை அடுத்து, கல்லூரி முதல்வர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.

அதன்படி, ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்களுடன் கல்லூரியில் பிரவேசிக்க அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது. சில தினங்கள் முன்பு வரை ஹிஜாப் இன்றி கல்லூரி வந்த மாணவிகள், கர்நாடக விவகாரத்தை அடுத்தே ஹிஜாப்புடன் வருவதாக தாடியா கல்லூரி நிர்வாகம் குற்றம்சாட்டுகிறது.

ஆனால், விஹெச்பி போராட்டத்துக்கு இணங்கியே ஹிஜாப்புக்கு எதிரான முடிவை கல்லூரி நிர்வாகம் எடுத்திருப்பதாக அந்த மாணவிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். முன்னதாக, மபியின் மற்றுமொரு கல்லூரியில் ஹிஜாப்புடன் வந்த மாணவியிடம் மன்னிப்புக் கடிதம் பெற்ற பின்னரே அவரை அந்த கல்லூரி நிர்வாகம் அனுமதித்ததும் நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE