வயநாட்டில் பிரியங்கா போட்டி முதல் இடைத்தேர்தல் குறித்து தவெக அறிவிப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 

By KU BUREAU

> வயநாட்டில் பிரியங்கா போட்டி: வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், உத்தர பிரதேசத்தை சேர்ந்தவருமான ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம், “காங்கிரஸ் அவரை வயநாடு தொகுதியில் போட்டியிட செய்துள்ளதன் மூலம்ஒன்றை உறுதி செய்துள்ளது.

அது என்னவென்றால் காங்கிரஸ் கட்சி, இந்துக்களை நம்பவில்லை என்பதுதான். அவர்கள் இந்துக்களை நம்பி இருந்தால் பிரியங்கா காந்தி வேறொரு தொகுதியில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

> தேர்தலில் பிரியங்கா போட்டி, பாஜக விமர்சனம்: வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், பாஜக இதனை கடுமையாக விமர்சித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ராஜீவ் சந்திரசேகர், "வயநாடு தொகுதி வாக்காளர்கள் மீது ஒருவர் மாற்றி ஒருவர் என தனது வாரிசுகளைத் திணிக்கும் காங்கிரஸ் கட்சியின் வெட்கமில்லாதனம் இது. ராகுல் காந்தி மற்றொரு தொகுதியைத் தேர்ந்தெடுத்துவிட்டார் என்பதை மறைக்கும் வெட்கமின்மை இது" என்று தெரிவித்துள்ளார்.

> கஞ்சன்ஜுங்கா விபத்து பகுதியில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடக்கம்: மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் கஞ்சன்ஜுங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் ஒன்று திங்கள்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. அந்தப் பகுதியில் 20 மணி நேரம் நடந்த மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு பின்னர் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. 9 உயிரிழந்து, பலர் படுகாயமடைந்த இந்த விபத்துக்காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யபப்பட்டன, மாற்றி விடப்பட்டிருந்தன.

> நீட் முறைகேடு வழக்கு என்டிஏ, மத்திய அரசுக்கு நோட்டீஸ்: சமீபத்தில் நடந்த நீட் - யுஜி 2024 தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்ளுக்கு பதில் அளிக்கும் படி, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஜுன் 18) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், "யாரவது 0.001 சதவீதம் அலட்சியமாக நடந்திருந்தாலும் அது முழுமையாக ஆராயப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

> “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை”: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் தவெக போட்டியிடாது” என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

> அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

> “அதிமுக பின் வாங்குகிறது என்றால்...” - அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம்: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிசாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதை அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

> மோசமான வானிலையால் சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி அளவில், திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மோசமான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்துக்கு தரையிறங்க வந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல், வானில் தொடர்ந்து வட்டமடித்து பறந்து கொண்டிருந்தன. மழையால் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. துபாய் செல்லும் விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

> இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முடிவுகட்ட அன்புமணி வலியுறுத்தல்: “வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

> பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்: அண்டை நாடான பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவின் வசம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIRPI) என்ற ஸ்வீடன் நாட்டு நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE