இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் ராக்கெட்: கவுண்ட்டவுன் தொடங்கியது!

By காமதேனு

நாளை ஏவப்பட உள்ள பிஎஸ்எல்வி- சி52 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் கணக்கை, இஸ்ரோ நிறுவனம் இன்று காலை தொடங்கியது.

ஈஓஎஸ்-04 என்ற செயற்கைக்கோளினை சுமந்துகொண்டு இஸ்ரோவின் பிஎஸ் எல்வி- சி52 ராக்கெட் நாளை(பிப்.14) காலை விண்ணுக்கு பாய உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பான வழக்கமான பணிகள், கரோனா பரவல் காரணமாக சுணக்கம் கண்டிருந்தது. நடப்பாண்டில் பல்வேறு பணிகளை இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோள் நாளை ஏவப்பட உள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாயும். அதற்கான 25.30 மணி நேர கவுண்ட்டவுன் கணக்கு, இன்று காலை 4.29 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட் ஈஓஎஸ்-04 செயற்கைக்கோள் உட்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்துசெல்கிறது. அவற்றில் இதர 2 செயற்கைக்கோள்களும் அளவில் சிறியவை.

புவி கண்காணிப்பு பணிக்காக அனுப்பப்படும் ஈஓஎஸ்-04 செயற்கைக்கோள், விண்ணிலிருந்தபடி விவசாயம், நீர் மற்றும் இயற்கை வளம் சார்ந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபடும். சுமார் 10 ஆண்டுகள் காலம் இது விண்வெளியில் நிலைகொண்டு தனது சேவையை தொடர உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE