பிஹாரில் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக ரத்து!

By காமதேனு

கரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து பிஹார் மாநிலத்தில் கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

மூன்றாவது அலை குறித்தான அச்சுறுத்தல்கள் மற்றும் கவலைகள் அகன்று வருவதால், நாடெங்கும் கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் பல்வேறு மாநிலங்களும் தங்கள் அளவில் கரோனா பாதிப்பை ஆய்வு செய்து, ரத்து அறிவிப்புகளில் சற்றே வித்தியாசம் காட்டி வருகின்றன. மகாராஷ்டிரா போன்ற கரோனா அலைகளில் அதிகம் அலைக்கழிக்கப்பட்ட மாநிலம்கூட, முகக்கவசத்தை இனியும் தொடர வேண்டுமா என்று சட்டப்பேரவையில் விவாதம் நடத்தியது.

பிஹார் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த சில தினங்களாகவே நூற்று சொச்சமாகவே நீடித்து வருகிறது. இதனையடுத்து கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்ய பிஹார் அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய நடைமுறைகள் நாளை(பிப்.14) முதல் நடைமுறைக்கு வருவதாக மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

கரோனா பரவலின் முதல் அலையின்போதே பிஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு இந்தியர்களின் இயல்பான நோயெதிர்ப்பு சக்தி குறித்தும் பின்னர் இரண்டாவது அலையின்போது, மந்தை நோய் எதிர்ப்பு சக்தி குறித்தும் அதிகம் விவாதிக்கப்பட்டது. டெல்டாவின் தாக்கத்தாலும் பிஹாரின் பாதிப்புகள் அதிகரித்திருந்தபோதும், உள்ளடங்கிய பிஹார் பிராந்தியங்களில் கரோனா பரவல் குறித்த அலட்சியமே நீடித்திருந்தது. அதேபோல, தடுப்பூசி போட்டுக்கொள்வதிலும் அங்கே மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருந்தது.

இந்நிலையில் பிஹார் மாநிலம், கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. முன்னதாக இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஒருசில கட்டுப்பாடுகளே பிஹாரில் அமலில் இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE