“ராகுல் காந்தி நவீன கால ஜின்னா!” - அசாம் முதல்வர் காட்டம்

By காமதேனு

உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, “பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டே இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். மேலும், “நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா என்பதற்கு நாங்கள் எப்போதாவது ஆதாரம் கேட்டிருக்கிறோமா?” என்றும் தரக்குறைவான வகையில் அவர் பேசினார்.

இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர். அசாம் தலைநகர் குவாஹாத்தியில் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவின் உருவ பொம்மையையும் தீயிட்டுக் கொளுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குவாஹாத்தியில் இன்று நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அவர், “எதிரியின் எல்லைக்குள் செல்வதற்கு முன்னர் நமது ராணுவ வீரர்கள் ஒரு மாதம் திட்டம் போடுகின்றனர். இவை வியூக ரீதியிலான நடவடிக்கைகள். இந்த நடவடிக்கை முடிந்த பின்னர்தான் செய்தியறிக்கைகள் வெளியிடப்படும். அதன் பின்னர்தான் நமக்கு அது தெரியவரும். இப்படி இருக்கையில், அந்த நடவடிக்கைக்கான ஆதாரத்தை ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தால் எப்படி? ராணுவ வீரரின் வலியைப் பற்றி நினைக்க வேண்டாமா?” என்று பேசினார்.

காங்கிரஸின் ‘கர்மவினையை’ நேற்று காட்டிவிட்டதாகக் கூறியிருக்கும் அவர், “எல்லோரும் அதைப் பார்த்துவிட்டார்கள் என நினைக்கிறேன். தொடர்ந்து என் மீது தாக்குதல் நடத்திவருகிறார்கள். ட்விட்டரிலும் தாக்கி எழுதுகிறார்கள். என் நோக்கம் நிறைவேறிவிட்டது. இப்போது ராணுவத்திடமிருந்து அவர்கள் ஆதாரம் கேட்க மாட்டார்கள்” எனக் கூறினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் பாஜகவை விமர்சித்து ராகுல் காந்தி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “ஜின்னாவின் ஆவி உடலுக்குள் புகுந்துவிட்டதைப் போல ராகுல் பேசினார்” என்றார்.

1947-க்கு முன்னதாக முகமது அலி ஜின்னா பேசியதுபோல ராகுல் காந்தியின் மொழி இருக்கிறது என்றும், அந்த வகையில் ராகுல் காந்தி ஒரு நவீன ஜின்னா என்றும் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE